செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி

Published On 2018-11-17 19:20 GMT   |   Update On 2018-11-17 19:20 GMT
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Australia #SouthAfrica #AUSvsSAT20
கார்ரா:

ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கார்ராவில் நேற்று நடந்தது. போட்டி தொடங்கும் முன்பு மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டதால் இந்த ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 27 ரன்னும், குயின்டான் டி காக் 22 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே, ஆன்ட்ரூ டை தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 38 ரன்னும் (23 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்), கிறிஸ் லின் 14 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி, கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் போட்டிக்கான கோப்பையை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
Tags:    

Similar News