செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்- இந்தியாவிற்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

Published On 2018-09-23 15:04 GMT   |   Update On 2018-09-23 15:04 GMT
சோயிப் மாலிக், சர்பிராஸ் அகமது சிறப்பான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #AsiaCup2018 #INDvPAK
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் பகர் சமான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஆனால் 31 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் விளையாடிய பாபர் ஆசம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 58 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் கான் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. நேரம் ஆகஆக இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய சர்பிராஸ் அகமது 44 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சோயிப் மாலிக் ஆட்டமிழந்தார்.



6-வது வீரராக களம் இறங்கிய ஆசிப் அலி 21 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் ரன்வேகத்தில் தடை ஏற்பட்டது. 50 ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 238 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News