செய்திகள்

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை - விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம்

Published On 2018-09-22 22:22 GMT   |   Update On 2018-09-23 00:03 GMT
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. #RajivGandhiKhelRatna #BajrangPunia #ViratKohli
புதுடெல்லி :

சர்வதேச அளவில் சாதிக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் சாதனை அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அவ்வாறு விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அதிருப்தி தெரிவித்தார். புள்ளிகள் அடிப்படையில் தாம் அதிக புள்ளிகளை எடுத்த போதும், விருது வழங்காமல் ஏன் என்னை புறக்கணித்தனர் என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக அவர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் பஜ்ரங் பூனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என மந்திரியிடம் கேட்டேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு. விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார்.



அவரது இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் புள்ளிகள் என்பது வீரர்களின் சாதனையை ஒட்டுமொத்தமாக வேறுபடுத்தி கணக்கிடுவது அல்ல. ஒரு வீரர் அவர் சார்ந்த விளையாட்டு துறையில் சாதித்ததை மட்டுமே அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.

எனவே, டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற மூன்று வித போட்டிகளின் ஐசிசி தரவரிசை பட்டியளில் இரண்டு விதமான போட்டிகளில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் மீரா பாய் சானு மட்டுமே ஒலிம்பிக் சாம்பியனாக உள்ளார். இதன் அடிப்படையிலேயே அவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, கோர்ட்டுக்கு செல்வதாக கூறிய பஜ்ரங் பூனியாவை அவரது பயிற்சியாளர் சாமாதானப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #RajivGandhiKhelRatna #BajrangPunia
Tags:    

Similar News