செய்திகள்

தொடர் முழுவதும் தலைவலி கொடுத்து சதம் அடிக்க வழிவிட்ட பும்ராவிற்கு நன்றி- குக்

Published On 2018-09-11 13:52 GMT   |   Update On 2018-09-11 13:52 GMT
ஓவல் டெஸ்டில் சதம் அடித்த அலஸ்டைர் குக் ‘ஓவர் த்ரோ’ மூலம் ஐந்து ரன்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த பும்ராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். #AlastairCook
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன அலஸ்டைர் குக் இன்றுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நேற்று இந்தியாவிற்கு எதிரான ஓவல் டெஸ்டில் தனது கடைசி இன்னிங்சை விளையாடினார்.

ஒரு கட்டத்தில் 96 ரன்கள் அடித்திருந்தார். இன்னும் நான்கு ரன்கள் அடித்தால் சதத்துடன் விடைபெறலாம் என்ற நெருக்கடியில் குக் களத்தில் நின்றிருந்தார். அப்போது ஜடேஜா வீசிய பந்தை ஆஃப் சைடு அடித்தார். அது பும்ரா கைக்கு சென்றது. அப்போது குக் ஒரு ரன்னிற்காக மெதுவாக நடந்து வந்தார். ஏறக்குறைய க்ரீஸை நெருங்கி விட்டார்.

அந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் பும்ரா ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். இதை ஜடேஜா சற்றும் எதிர்பார்க்கவில்லை. பந்து அவரை நின்றிருந்த இடத்தை விட்டு வெகு தொலையில் சென்றது. இதனால் ஓவர் த்ரோ மூலம் பந்து பவுண்டரியை அடைந்தது.

97 ரன்னில் நின்றிருந்த குக் எந்தவித சிரமமின்றி சதம் (101) அடித்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிந்த பின்னர் அலஸ்டைர் குக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சதம் அடிக்க வேண்டும் என்ற தலைவலியை பும்ரா குறைத்துவிட்டார். அவருக்கு நன்றி என்று தெரிவித்தார்.



இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘நான் 97 ரன்களுக்காக ஒரு ரன் அடித்துவிட்டு வரும்போது, மேலும் மூன்று ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. பும்ரா கைக்கு பந்து சென்றதும், அவர் கீப்பரிடம் த்ரோ செய்வார் என்று நினைத்தேன். ஆனால் பந்தை வேகமாக வீசினார். அப்போது நான் ஜடேஜாவை பார்த்தேன். அவர் பந்து செல்லும் திசைக்கு அருகில் இல்லை. அப்போது சதம் நெருங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஓவர் த்ரோ என்னுடைய தலைவலியை தீர்த்துவிட்டது. இந்த தொடர் முழுவதும் பும்ரா ஏராளமான தலைவலி தந்தார். தற்போது ஓவர் த்ரோ மூலம் ஒரு வாய்ப்பு தந்தார். இதற்கான நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News