செய்திகள்

டைட்டிலுடன் நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார் பெடரர்

Published On 2018-06-25 09:19 GMT   |   Update On 2018-06-25 09:19 GMT
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ளார் ரோஜர் பெடரர். #RogerFederer
ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - குரோசியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 7(8) - 6(6) என கோரிச் போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பெடரர் 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் கோரிச் அதிரடியாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய கோரிச் இந்த செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்ற கோரிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.



முன்னணி வீரரான ரோஜர் பெடரர் புல்தரையில் தொடர்ச்சியாக 20 வெற்றிகள் பெற்றிருந்தார். கோரிச் அந்த சாதனைக்கு இறுதிப் போட்டியில் முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் பெடரர் நம்பர் ஒன் இடத்தையும் இழந்துள்ளார்.

நடால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றியுள்ளார். இருவருக்கும் இடையில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பிரெஞ்ச் ஓபனை வென்று நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடாலை, ஸ்டட்கார்ட் தொடரை வென்ற பெடரர் முதல் இடத்திற்கு முன்னேறினார். தற்போது 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
Tags:    

Similar News