செய்திகள்

அம்பயர் கருணையால் சதத்துடன் சாதனையும் படைத்த தவான்

Published On 2018-06-14 13:33 GMT   |   Update On 2018-06-14 13:33 GMT
அம்பயர் விக்கெட் கொடுக்க மறுத்ததால் 24 ரன்னில் இருந்து தப்பிய தவான் சதத்துடன் சாதனையும் படைத்துள்ளார். #INDvAFG
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உற்சாகத்துடன் களம் இறங்கினார்கள். இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வஃபாதர், யாமின் அஹ்மத்சாய் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதலை தொடங்கினார்கள்.

10-வது ஓவரை வஃபாதர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்து தவானின் பேடை தாக்கியது. ஆனால் பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச்செல்லும் என்பதால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரிவியூ கேட்க ஆர்வம் காட்டவில்லை.

அடுத்த பந்தை ஆஃப்ஸ்டம்பிற்கு வெளியே பவுன்சராக வீசினார். தவான் பேட்டை சற்று தூக்கி தடுக்க முயன்றார். பந்து பேட்டை உரசியபடி விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் அடைந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவுட் அப்பீல் கேட்டனர். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.



உறுதியாக பேட்டில் பட்டதா? என்பதை யூகிக்க முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரிவியூ கேட்க விரும்பவில்லை. ஆனால் ரீபிளே-யின்போது அல்ட்ராஎட்ஜ் டெக்னாலஜியில் பந்து பேட்டில் உரசியது தெளிவாக தெரிந்தது. இதனால் வஃபாதர் முதல் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார்.

அப்போது தவான் 33 பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்தார். நடுவர் கருணையால் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்ததுடன், மதிய உணவு இடைவேளைக்கும் சதம் அடித்த 6-வது வீரரும், இந்தியாவின் முதல் வீரரும் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார்.
Tags:    

Similar News