செய்திகள்

ஐதராபாத் சன்ரைசஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸி. வீரர் வார்னர் விலகல்

Published On 2018-03-28 13:18 IST   |   Update On 2018-03-28 13:18:00 IST
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் ஐதராபாத் சன்ரைசஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகினார். #IPL2018 #davidwarner #balltampering
புதுடெல்லி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வீரர்கள் அறையில் இருநாட்டு வீரர்கள் மோதல், களத்தில் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் ஆஸ்திரேலியா சிக்கி இருந்தது.

அதோடு புதிதாக பந்தை சேதப்படுத்திய பிரச்சனையில் சிக்கியது அவமானத்தை ஏற்படுத்தியது. கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவியும், வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுமித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. அதோடு 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் தென்ஆப்ரிக்கா தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், டேவிட் வார்னர் ஐ.பி.எல். தொடரின் ஐதராபாத் சன்ரைசஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறினார். இதனால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #IPL2018
#davidwarner #balltampering


Similar News