செய்திகள்

ஆடும் லெவனில் கட்டாயம் இடம் கிடைக்கும்: ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை

Published On 2017-10-31 10:33 GMT   |   Update On 2017-10-31 10:33 GMT
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கட்டாயம் ஆடும் லெவன் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார்.

இவர் தரம்சாலாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். விராட் கோலிக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் களம் இறக்கப்பட்டார். இதனால் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பு தள்ளிப்போனது.

இதேபோன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்கிடைத்தும் ஆடும் லெவனில் விளையாட முடியால் வெளியில் இருந்தார். ஆனால் தற்போது உறுதியாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்று ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



நியூசிலாந்து தொடர் குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘இந்திய அணியில் இடம்கிடைத்தால், ஆடும் லெவனில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. மூன்று போட்டிகள் உள்ளன. ஒரு போட்டியிலாவது இடம்பிடித்தால் கூட நல்ல நினைவாக இருக்கும். விளையாடுவது பற்றி நான் சிந்திக்கவில்லை. விளையாடாமல் வெளியில் இருந்தால் கூட, முழு முயற்சி எடுப்பேன். எப்படியிருந்தாலும் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.



நான் எந்த இடத்திலும் களம் இறங்க தயார். எந்த வரிசையில் களம் இறங்கி விளையாடுவது குறித்து மனதில் ஏதும் இல்லை. ஐ.பி.எல். தொடரில் 4-வது, 3-வது இடம் என இடமாறி களம் இறங்கியுள்ளேன். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஏனென்றால், எந்த இடத்திலும் களம் இறங்க நான் வசதியாக இருக்கிறேன். நான் அணியில் இடம்பிடித்தால், எந்த இடத்திலும் களம் இறங்கி, என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’’ என்றார்.
Tags:    

Similar News