செய்திகள்

32-வது சதம், 9 ஆயிரம் ரன்கள், ஒரு வருடத்தில் அதிக ரன்: விராட் கோலி அசத்தல்

Published On 2017-10-29 16:33 IST   |   Update On 2017-10-29 16:33:00 IST
கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கோலி, 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்பின் முதலில் களம் இறங்கிய இந்தியா 6.1 ஓவரில் 29 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. தவான் 20 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.



அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 37-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 83 ரன்னைத் தொட்டார். அப்போது விராட் கோலி 202 போட்டியில் 194 இன்னிங்சில் 9 ஆயிரம் ரன்கள் எடுத்து, விரைவாக 9 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.



தொடர்ந்து விளையாடிய விராட் கோலி, 96 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 32-வது சதத்தை பதிவு செய்தார்.



அத்துடன் கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் தன்வசமாக்கினார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் ஒரே வருடத்தில் 1424 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 1373 ரன்களும் சேர்த்திருந்தனர். தற்போது அதை விராட் கோலி முறியடித்துள்ளார்.

Similar News