செய்திகள்

ஐதராபாத்தின் வெற்றி வாய்ப்பை மழை பறித்து விட்டது: முத்தையா முரளீதரன் சொல்கிறார்

Published On 2017-05-18 16:31 IST   |   Update On 2017-05-18 16:31:00 IST
கொல்கத்தாவிற்கு எதிரான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வெற்றியை மழை பறித்து விட்டதாக, அந்த அணியின் பயிற்சியாளர் முரளீதரன் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 128 ரன்கள் எடுத்தது.

ஐதராபாத் விளையாடி முடித்ததும் மழை பெய்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 6 ஓவரில் 48 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இந்த ஸ்கோரை கொல்கத்தா அணி சேஸிங் செய்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், பெங்களூரு மைதானத்தில் 128 ரன்கள் போதுமானதே. 20 ஓவர்கள் விளையாடியிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்று ஐதராபாத் அணி பயிற்சியாளர் முத்தையான முரளீதரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து முத்தையா முரளீதரன் மேலும் கூறுகையில் ‘‘இந்த வருடம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பெங்களூரூ ஆடுகளம் மிகவும் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டிகளாகத்தான் இருந்தது. 130 ரன்பது இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர்தான். 6 ஓவர் ஆட்டத்தை விட, 20 ஓவர் போட்டியாக ஆடியிருந்தால் அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

அடித்து ஆடுவதற்கு இந்த ஆடுகளம் சிறந்ததாக இல்லை. நீங்கள் உங்களுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டால், 70 முதல் 80 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடுவீர்கள். 140 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் 20 ஓவர் விளையாடியிருந்தால், அவர்களை இந்த ரன்னுக்குள் எங்கள் பந்து வீச்சால் கட்டுப்படுத்தியிருப்போம்.’’ என்றார்.

Similar News