செய்திகள்

62 ஒவர் நின்று இந்தியாவின் வெற்றியை பறித்த ஷேன் மார்ஷ்- ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி

Published On 2017-03-20 19:10 IST   |   Update On 2017-03-20 19:10:00 IST
ராஞ்சி டெஸ்டில் 62 ஓவர்கள் நிலைத்து நின்ற ஆஸி.யின் ஷேன் மார்ஷ் - ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி, இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டி இன்று டிராவில் முடிந்தது. எப்படியும் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஷேன் மார்ஷ்- ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி அதை முறியடித்துவிட்டது.

முதல் இன்னிங்சில் 152 ரன்கள் பினதங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஆட்டம் தொடங்கியதும் மதிய உணவு இடைவேளைக்கு முன் முக்கிய பேட்ஸ்மேனான ரென்ஷா மற்றும் ஸ்மித் ஆகியோரை இழந்தது.

அதன்பின் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். அப்போது இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றியது.



இருவரும் இணைந்து 62 ஓவர்களை சமாளித்து விட்டனர். 29.1-வது ஓவரில் ஸ்மித் அவுட்டான பிறகு 91.2-வது ஓவரில்தான் ஷேன் மார்ஷ் ஆட்டம் இழந்தார். 197 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார் மார்ஷ். ஹேண்ட்ஸ்காம்ப் 200 பந்தில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இருவரும் இணைந்து 397 பந்துகளை சந்தித்துள்ளனர். 100 ஓவரில் இவர்கள் 66.1 ஓவர்களை சமாளித்தனர். இதனால் இந்தியாவின் வெற்றியை பறித்து விட்டனர்.

Similar News