செய்திகள்

வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டூவர்ட் லா நியமனம்

Published On 2017-01-28 13:44 GMT   |   Update On 2017-01-28 13:44 GMT
வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின்னர் அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் ‘லா’வை தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இவரது பதவிக்காலம் இரண்டு வருடமாகும்.

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக விளங்கிய லா, குயின்ஸ்லாந்து மாநில அணிக்காக ஷெபில்டு ஷீல்டு தொடரில் அபாரமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 48 வயதாகும் லா, இதற்கு முன் 2011-ல் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகவும், 2011 முதல் 2012 வரை வங்காளதேச அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மேலும் பல அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

வங்காள தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் குல்னா டைடன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவ் கேமரூன் லாவின் செயல்பாட்டை கண்காணித்துள்ளார். லாவின் பயிற்சியாளர் செயல்பாடு பிடித்துப்போக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளார். லா பிப்ரவரி 15-ந்தேதியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் பென்னெட் கிங், ஜான் டைசன் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளனர்.

Similar News