செய்திகள்

இயன் சேப்பல் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்த மிஸ்பா உல் ஹக்

Published On 2017-01-13 16:39 GMT   |   Update On 2017-01-13 16:39 GMT
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 0-3 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது.

இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வந்து விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுக்கக்கூடாது, அவர்கள் சொந்த மைதானத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பாகிஸ்தான் அணி, அந்த அணியின் கேப்டன் மிஸ்பா ஆகியோர் பற்றியும் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘‘பாகிஸ்தான் அணியில் என்னுடைய இடம், என்னுடைய கேப்டன் பதவி மற்றும் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்தல் போன்றவற்றை குறித்து இயன் சேப்பல் கடுமையான விமர்சனம் செய்துள்ளதை அறிந்தேன்.

அந்த விமர்சனங்கள் எல்லாம் தேவையில்லாதது. அதேபோல் நன்றாக கிரிக்கெட் விளையாடி, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் மிகுந்த அனுபவம் உடைய முன்னாள் வீரரின் தகுதிக்கேற்ப விமர்சனம் இது கிடையாது. அவரது விமர்சனம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது அவரது அஸ்தஸ்துக்கு ஏற்றது கிடையாது.

ஆஸ்திரேலியா சமீப காலமாக வெளிநாட்டு மண்ணில் தொடர்களை இழந்துள்ளது. இலங்கை மண்ணில் 0-3 என ஒயிட்வாஷ் ஆனது. இலங்கை அணியில் ஜாம்பவானாக இருந்த ஜெயவர்தனே, குமார் சங்கக்கரா போன்ற வீரர்கள் இல்லை. 10 டெஸ்டிற்கும் குறைவாக விளையாடிய வீரர்களே அதிக அளவில் இருந்தனர்.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் தொடரை 0-5 என இழந்தது. அதற்கு முன் நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும், இந்தியா தனது சொந்த மண்ணிலும் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளோம். வழக்கமாக அவர்கள் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட பின்னர், அவர்கள் கட்டாயம் எங்கள் இடத்திற்கு (ஆசியா) சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமா?

அவர்கள் ஆசிய கண்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்யாமலும், அல்லது நாங்கள் ஆஸ்திரேலியா செல்லாமலும் இருந்தால் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்?’’ என்று பதிலடி கொடுத்தார் மிஸ்பா.

Similar News