செய்திகள்

மத்திய மந்திரி கோயல் மீது வழக்கு தொடர்வேன்: அபய்சிங்சவுதாலா

Published On 2016-12-29 07:48 GMT   |   Update On 2016-12-29 07:48 GMT
மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்வேன் என்று அபய்சிங்சவுதாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கவுரவ ஆயுட் கால தலைவர்களாக சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது பதவி விலக சொல்ல வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல், ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ்கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் நியமனம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. அவர்களை நீக்காவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள மாட்டோம் என்றார்.

இந்த நிலையில், கவுரவ தலைவர் பதவியை சுரேஷ் கல்மாடி ஏற்க மறுத்து விட்டார். ஆனால் அபய்சிங் சவுதாலா தனது முடிவில் இருந்து மாற மறுத்து விட்டார். அவர் கூறுகையில் என் மீது கிரிமினல், மற்றும் ஊழல் வழக்குகள் இருப்பதாக விஜய் கோயல் கூறி இருப்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. என் மீது இருப்பது கிரிமினல் வழக்கு அல்ல. அது ஒரு அரசியல் ரீதியான வழக்கு. மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்வேன்.

ஒலிம்பிக் விளையாட்டுக்காக நான் நிறைய உழைத்து இருக்கிறேன். எனவே கவுரவ ஆயுட்கால தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் என்றார்.

Similar News