செய்திகள்

தனியாக இருந்த எனக்கு துணை கிடைத்து வி்ட்டது: கருண் நாயருக்கு சேவாக் வாழ்த்து

Published On 2016-12-19 18:42 IST   |   Update On 2016-12-19 18:42:00 IST
முச்சதம் அடித்த ஒரே வீரர் என கடந்த 12 வருடமாக தனியாக இருந்தேன். தற்போது எனக்கு துணை கிடைத்து விட்டது என்று கருண் நாயருக்கு சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்று 4-வது நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் கருண் நாயர் 381 பந்துகளை சந்தித்து 32 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 303 ரன்கள் குவித்தார். இதன் மூலம் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் சேவாக் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். சேவாக் டுவி்ட்டர் மூலம் கருண் நாயருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘‘300 ரன்கள் அடித்த வீரர்கள் என்ற கிளப்பிற்கு கருண் நாயரை வரவேற்கிறேன். கடந்த 12 வருடம் 8 மாதங்களாக இந்த கிளப்பில் தனியாக இருந்தேன். தற்போது துணை கிடைத்துள்ளது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



2004-ம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற போட்டியில் சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக 375 பந்தில் 309 ரன்கள் குவித்தார். இதில் 39 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்கும். அதன்பின் 2008-ம் ஆண்டு சென்னையில் 304 பந்தில் 319 ரன்கள் குவித்தார். இதில் 42 பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள் அடங்கும்.

Similar News