செய்திகள்

எனது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்: டோனியின் உணர்வுபூர்வமான பேட்டி

Published On 2016-09-17 04:41 GMT   |   Update On 2016-09-17 04:41 GMT
2007-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தோல்வியும், அதனால் ஏற்பட்ட விளைவுகளுமே தனது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக டோனி கூறியுள்ளார்.
நியூயார்க் :

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி, ‘எம்.எஸ்.டோனி-தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற இந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 30-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்தது. இதில் டோனி, அவரது மனைவி சாக்‌ஷி, படத்தின் தயாரிப்பாளர் அருண் பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்கள் மத்தியில் டோனி பேசுகையில், ‘இது ஒரு சாதாரண கதை. அது தான் இங்கு அழகு. ஆனால் நான் நீரஜ் பாண்டேயிடம் (இயக்குனர்) ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக கூறினேன். ‘இது எனது புகழ்பாடும் படமாக இருக்கக்கூடாது, ஒரு தொழில்முறை விளையாட்டு வீரரின் பயணத்தை சித்தரிப்பதாக இருக்க வேண்டும்’ என்றேன். எடிட்டிங் செய்யப்படாத படத்தை முதன்முதலில் பார்த்த போது, எனது சிறு வயது நாட்கள் மீண்டும் ஒரு முறை கண்முன் வந்து நின்றது. நான் வசித்த இடம், படித்த பள்ளிக்கூடம், விளையாடிய இடங்கள் என்று பழைய நினைவுகள் மனதில் புதிதாக பதிவாகின. எனது பெற்றோரிடம் கிரிக்கெட் குறித்து நான் ஒரு போதும் பேசியதில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை பார்த்த போது, உண்மையில் அவர்கள் என்னை பற்றி என்ன நினைத்தார்கள் என்பதை அறிய முடிந்தது. இது ஒரு புதுமையான அனுபவமாகும்’ என்றார்.

2007-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் (50 ஓவர்) முன்னாள் சாம்பியன் இந்திய அணி இலங்கை மற்றும் வங்காளதேசத்திடம் தோற்று முதல் சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறியது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டு வந்த டோனியின் வீடு மீது கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த டோனி, அது தான் தனது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

அது தொடர்பாக டோனி உணர்வுபூர்வமாக கூறியதாவது:-

உலக கோப்பை தோல்வியுடன் நாங்கள் டெல்லி வந்து இறங்கியதும், நிறைய ஊடகத்தினர் எங்களை முற்றுகையிட்டனர். இது மாதிரியான நேரங்களில், நாங்கள் தோல்வி குறித்து கவலைப்படுவதில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு விளையாட்டு வீரராக அனைத்தையும் (கசப்பான அனுபவங்கள்) தாங்கும் வலுவான மனநிலையை கொண்டிருக்க வேண்டும், உணர்ச்சிகள் நமக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை பொறுத்தவரை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது பத்திரிகையாளர் சந்திப்பில் அழுது புலம்புவதோ அல்லது தோல்வியை தழுவியதும் மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறுவதை சார்ந்ததோ அல்ல.

அன்று நாங்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி போலீஸ் வேனில் ஏறினோம். ஷேவாக் அருகில் நான் அமர்ந்து இருந்தேன். அது லேசாக இருள் சூழ்ந்த நேரம். சராசரியாக 60-70 கிலோ மீட்டர் வேகத்தில், மிகவும் குறுகலான சாலைகளில் எங்களது வேன் சென்று கொண்டிருந்தது. எங்களை சுற்றி ஊடக வாகனங்கள் பின்தொடர்ந்தன. அவர்கள் விளக்கை எரியவிட்டபடி கேமராக்களுடன் மொய்த்த விதத்தை பார்த்த போது, நாங்கள் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டு போலீஸ் வேனில் சென்றது போன்ற ஒரு உணர்வை தந்தது. கிட்டத்தட்ட கொலையாளி அல்லது பயங்கரவாதி போன்றே சொல்லலாம். உண்மையில் நாங்கள் அன்று ஊடகத்தினரால் துரத்தி விடப்பட்டோம்.

பிறகு போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தோம். 15-20 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து எங்களது கார்களில் கிளம்பினோம். இந்த சம்பவம் தான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியது. களத்தில் ஆக்ரோஷமாக விளையாடி சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒரு சிறந்த மனிதராகவும் என்னை உருவாக்கிக் கொள்ள உதவியது.

இவ்வாறு டோனி கூறினார். 

Similar News