செய்திகள்

கடைசி போட்டியிலும் அசத்தல்: ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை

Published On 2016-08-17 10:14 GMT   |   Update On 2016-08-17 10:40 GMT
கொழும்பில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இலங்கை - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சண்டிமால் (132), தனஞ்செயா டி சில்வா (129) ஆகியோரின் சதத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் (119) மற்றும் ஷேன் மார்ஷ் (130) ஆகியோரின் சதத்தால் முதல் இன்னிங்சில் 379 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

இதையடுத்து 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, குசால் சில்வா (115), தனஞ்செயா டி சில்வா (65) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 347 ரன்கள் குவித்தது. இதனால், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 324 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.



கடும் நெருக்கடியுடன் இந்த இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஜோடியான மார்ஷ்-வார்னர் மட்டுமே நம்பிக்கை அளித்தனர். மார்ஸ் 23 ரன்களில் அவுட் ஆனாலும், தொடர்ந்து நம்பிக்கை அளித்த வார்னர் 68 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் வந்த வீரர்கள் ஹெராத் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 160 ரன்களில் சுருண்டது. இலங்கை அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெராத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசி போட்டியின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரண்டு விருதுகளை ஹெராத் தட்டிச்சென்றார்.

Similar News