செய்திகள்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை: தங்கப்பதக்கத்தை திருப்பி கேட்டு ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு

Published On 2016-08-17 05:42 GMT   |   Update On 2016-08-17 05:42 GMT
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய வீராங்கனையின் தங்கப்பதக்கத்தை திருப்பி கேட்டு ரஷியாவுக்கு ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரியோ டி ஜெனீரோ:

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது 4x100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரஷியாவின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர் யூலியா செர்மோஷன்ஸ்க்கயா.

இந்தப் போட்டியின்போது இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக முன்னர் புகார்கள் எழுந்தன. ஆனால், அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் உள்ளிட்ட மாதிரி பரிசோதனைகளின்போது, அவர்  ஊக்க மருந்து பயன்படுத்தியதற்கான தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை.

ஆனால், போட்டியின்போது அவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியை மறுபரிசோதனை செய்தபோது,   யூலியா செர்மோஷன்ஸ்க்கயா(தற்போது வயது 30) தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்திய நிலையில் ஓடி வெற்றி பெற்றதாக தெரியவந்தது.

இதையடுத்து, பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவருக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷியா திருப்பி அளிக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒலிம்பிக்கில் அவர் நிகழ்த்திய முந்தைய சாதனையும் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது  தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக ரஷிய விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் 14 பேரின்மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் மறுபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.

Similar News