செய்திகள்

ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு தகுதி

Published On 2016-08-16 10:17 IST   |   Update On 2016-08-16 10:17:00 IST
ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும் கால்இறுதிக்கு முன்னேறினார்.
ரியோடி டி ஜெனீரோ:

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி ‘லீக்’ ஆட்டங்களில் தோற்று ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான சானியா நேவாலும் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேற்றப்பட்டார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தார்.

இந்த நிலையில் மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும் கால்இறுதிக்கு முன்னேறினார். இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அவர் சீன தைபேயை சேர்ந்த தாய் டிஜூவிங்கை எதிர்கொண்டார்.

இதில் பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 40 நிமிட நேரமே தேவைப்பட்டது.

சிந்து கால்இறுதியில் சீனாவை சேர்ந்த விங் யூகான் சந்திக்கிறார். யூகான் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். இதனால் கால்இறுதி ஆட்டம் சிந்துவுக்கு சவாலானது. இந்த ஆட்டம் நாளை அதிகாலை 3.25 மணிக்கு நடக்கிறது. ஸ்ரீகாந்த் கிடாம்பி கால்இறுதியில் சீன வீரர் லின்டானை நாளை மாலை 6 மணிக்கு எதிர்கொள்கிறார்.

Similar News