செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: பெல்ப்சுக்கு 5-வது பதக்கம்

Published On 2016-08-13 11:46 IST   |   Update On 2016-08-13 11:48:00 IST
பிரேசிலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளார்.

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்றவர் என்ற சாதனையை ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பே பெற்று இருந்தார்.

பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே 4 தங்கம் வென்று முத்திரை பதித்து இருந்தார். 200 மீட்டர் பட்டர்பிளை, 200 மீட்டர் தனி நபர் மெட்லே 4*100 மீட்டர் பிரீஸ்டைல், 4*200 மீட்டர் பிரீஸ்டைல் ஆகியவற்றில் அவர் வெற்றி பெற்று தங்கம் பெற்று இருந்தார்.

இன்று காலை நடந்த 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவிலும் பெல்ப்ஸ் வெற்றி பெற்று 5-வது தங்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் வெற்றி பெற முடியாமல் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. சிங்கப்பூரை சேர்ந்த 21 வயதான ஜோசப் ஸ்கூலிங் 50.39 வினாடியில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து பெல்ப்சை வீழத்தி தங்கம் வென்றார்.

பெல்ப்ஸ், லி குளோஸ் (தென் ஆப்பிரிக்கா), லாஸ்லோ செக் (அங்கேரி), ஆகிய 3 பேரும் 51.14 வினாடி யில் கடந்து 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

கடந்த 3 ஒலிம்பிக்கிலும் பெல்ப்ஸ் 100 மீட்டர் பட்டர் பிளை பிரிவில் தங்கம் வென்று இருந்தார். இந்த ஒலிம்பிக்கில்தான் அவர் தங்கத்தை இழந்து வெள்ளி பதக்கத்தை பெற்றார்.

இந்த ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் பெற்ற 5-வது பதக்கம் இதுவாகும்.

ஒட்டு மொத்த ஒலிம்பிக்கில் சேர்த்து அவர் 27 பதக்கம் (22 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) பெற்று யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்த படியாக சோயித் யூனியனை சேர்ந்த ஜிம்னாஸ்டி வீராங்கனை லார்சியா (1956-1964 ஆண்டுகளில்) 18 பதக்கம் பெற்று இருக்கிறார்.

Similar News