செய்திகள்

பெல்ப்சின் வெற்றி ரகசியம் என்ன?

Published On 2016-08-13 07:52 IST   |   Update On 2016-08-13 07:52:00 IST
மைக்கேல் பெல்ப்சின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அவரது பயிற்சியாளர் பாப் பவ்மேன் கூறுவதை பார்க்கலாம்.
நாம் இன்னும் ஒரு பதக்கம் வெல்லவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், பெல்ப்சால் மட்டும் எப்படி பதக்கமழையில் நனைய முடிகிறது.

இயற்கையாகவே நீச்சல் போட்டிக்குரிய உடலமைப்பை பெற்றவர் மைக்கேல் பெல்ப்ஸ். கடின உழைப்பு, இலக்கை அடைவதில் உள்ள வெறி, திட்டமிடல், சிறப்பான உடல்தகுதி ஆகியவையே பெல்ப்சின் வெற்றி ரகசியம் என்று அடிக்கடி சொல்வார், அவரது பயிற்சியாளர் பாப் பவ்மேன்.

6 அடி 4 அங்குலம் உயருடைய பெல்ப்சின் கைகள் இந்த உயரத்துடன் ஒப்பிடும் போது மற்றவர்களை காட்டிலும் சற்றே நீளமானது. இதனால் உயரத்திற்கு ஏற்ற அளவை விட 3 அங்குலம் கூடுதலான தூரத்தை எட்டக்கூடிய சிறப்பு தகுதி பெல்ப்சுக்கு உண்டு. நீச்சலில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் வீரர்கள் அங்கிருந்து திரும்பி வர நீருக்குள்ளேயே ஒரு குட்டிக்கரணம் அடித்து கால்களால் சுவரை உதைத்து ஒரு உந்துலை உருவாக்கி மீண்டும் நீந்திச் செல்வார்கள். இந்த விஷயத்திலும் பெல்ப்ஸ் சற்று வித்தியாசமானவர். குட்டிக்கரணம் அடிக்கும் போது, மற்றவர்களை போல் அதிக ஆழத்திற்கு செல்ல மாட்டார். நீரின் மேல்மட்டத்தில் இருப்பதால் நீரின் ஈர்ப்பு விசை மிக குறைவாக இருக்கும். இதன் காரணமாக மற்ற வீரர்கள் கால்களால் சுவரை உதைத்து கடக்கும் தூரத்தை விட பெல்ப்ஸ் சற்றே அதிக தூரம் செல்ல முடிகிறது. இந்த சூட்சுமத்தை பெல்ஸ் நீண்ட காலம் கடைபிடித்து வருகிறார்.

பெரும்பாலும் 30 வயதை கடந்த நீச்சல் வீரர்கள் வெற்றிகளை குவிப்பது எளிதான காரியமல்ல. இதை நன்கு உணர்ந்த பெல்ப்ஸ், முன்பை விட இன்னும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட வேண்டி இருந்தது. கடின பயிற்சியால் ஏற்படும் உடல்வலியை போக்குவதற்காக சில வைத்திய முறைகளையும் மேற்கொண்டார்.

சீனா, எகிப்துகளில் ‘கப்பிங்’ என்ற பழமையான சிகிச்சை முறை பிரபலம். ஆழமான தசைகளுக்கும் ‘மசாஜ்’ கொடுப்பதற்கான சிகிச்சை இது. ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் சூடான காட்டன் துணியை வைத்து உடலின் பல இடங்களில் கவிழ்த்து விடுவார்கள். வெப்பம் குறைய குறைய குடுவை உடலில் இறுக பற்றிக்கொள்ளும். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த குடுவை கீழே விழுந்து விடும். அந்த இடத்தில் அது ஆழமான பிடிப்புக்கான தழும்பை ஏற்படுத்தி இருக்கும்.

இவ்வாறு செய்வதால் குறிப்பிட்ட இடத்தில் ரத்த ஓட்டம் சீராகும். முதுகு வலிக்கும் இது நல்ல பலனை தருகிறது. வலி நிவாரணியான இந்த சிகிச்சையின் மூலம் கூடுதல் புத்துணர்ச்சி பெற முடியுமாம். பெல்ப்ஸ் உள்ளிட்ட மேலும் சில ஒலிம்பிக் வீரர்கள் இந்த சிகிச்சையை பெற்று இருக்கிறார்கள். அதனால் தான் பெல்ப்சின் உடலில் பல இடங்களில் சிவப்பு நிறத்தில் தழும்புகளை தற்போது காண முடிகிறது. நாளடைவில் இது மறைந்து விடும். பெல்ப்சின் புதிய உத்வேகத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள், நிபுணர்கள்.

Similar News