செய்திகள்

200 ரன் அடித்திருந்தாலும் சேஸ் செய்திருப்போம்: பெங்களூர் அணியின் பந்து வீச்சை கலாய்க்கும் டுவைன் சுமித்

Published On 2016-04-25 16:44 IST   |   Update On 2016-04-25 16:44:00 IST
பெங்களூர் அணி 200 ரன் அடித்திருந்தாலும் சேஸ் செய்திருப்போம் என்று குஜராத் அணியின் பேட்ஸ்மேன் டுவைன் சுமித் தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்:

ராஜ்கோட்டில் நேற்று மாலை நடைப்பெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின. பெங்களூர் அணிக்கு எதிராக 181 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து குஜராத் அணி வெற்றிப்பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் தொடக்க வீரர் டுவைன் சுமித் “அவர்களின் பந்து வீச்சு ஒன்றும் அவ்வளவு வலிமையானது இல்லை. இந்த ஆடுகளத்தில் அவர்கள் 200 ரன் அடித்திருந்தாலும் சேஸ் செய்திருப்போம். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வென்ற பிறகு 4-வது போட்டியில் தோற்றோம். ஆனால் இந்த போட்டியில் வெற்றிப்பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

அதிரடியாக ஆடுவது என் இயல்பு. அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து ஆடத்தான் விரும்புவேன். ஆனால் கேன் ரிச்சர்ட்சன் ஓவரில் 25 ரன்கள் அடித்தது போட்டியின் திருப்புமுனை” என்று தெரிவித்தார்.

நேற்று சுமித் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

பெங்களூர் அணியில் கெய்ல், டி வில்லியர்ஸ், விராட் கோலி, வாட்சன் போன்ற பேட்டிங் ஜாம்பவான்கள் இருந்த போதும், அவர்களின் பந்துவீச்சு மோசமாக இருப்பதால், 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

Similar News