- அக்டோபர் 9-ந்தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.
- ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன.
இன்றைய நாளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின் மூலையில் எங்கு இருந்தாலும் இணைய செயலிகளின் வழியே சில நொடிகளில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதுவே சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவலை உறவினருக்கு தெரிவிக்க வேண்டும் எனில் கடிதம் எழுதி தபாலில் அனுப்பி வைக்கப்படும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே அந்த செய்தி உரியவரின் கைகளில் சேரும். இப்படியாக நட்பு, காதல், பாசம், கோபம் என அனைத்துவிதமான உணர்வுகளும் அஞ்சல் கடிதங்கள் வழியே பகிர்ந்து கொள்ளப்பட்டன.
சுவிட்சர்லாந்தில் உள்ள போர்ன் நகரில் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1969-ம் ஆண்டு முதல் ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தையும், மக்களின் அன்றாட வாழ்வில் அஞ்சல் துறையின் பங்களிப்பு பற்றியும் பொதுமக்களிடம் எடுத்துரைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.
உலக அளவில் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்களை கொண்ட நாடு இந்தியா ஆகும். இ்ந்தியாவில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன. 1764-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 89 சதவீதம் தபால் நிலையங்கள் கிராமங்களில் உள்ளன. தபால் துறைகளில் அரசு காப்பீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள் என மக்களுக்கு பயன்படும் வகையில் நிறைய வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை இந்திய அஞ்சல் துறை எடுத்து வருகிறது.
அஞ்சல் துறையில் பலவகையான அஞ்சல்களும் குழப்பமின்றி பிரிக்கப்பட்டு, விரைவாக அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குறியீட்டு எண் திட்டம் முதன் முதலில் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6 இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் முதல் இலக்கம் மண்டலத்தையும், இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தையும் குறிக்கிறது. கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் தபால் நிலையத்தை குறிக்கும்.
தற்போது ஒரு சில அரசு துறைகளின் தகவல்கள் மற்றும் அறிவிக்கைகள், தனிநபர்களின் பார்சல்கள் மட்டுமே தபால் துறையின் மூலம் அனுப்பப்படுகின்றன. எழுதுகோலை கையில் கொண்டு கடிதங்கள் எழுதி தபால் மூலம் அனுப்புவதின் அனுபவத்தை உணர்ந்த தலைமுறையினர் இளைஞர்களை கடிதங்கள் எழுதுமாறு எடுத்துரைக்க வேண்டும். இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறுவார்கள். இன்றைய தகவல்களும் நாளைய சமூதாயத்தினருக்கு வரலாறாக மாறலாம். எனவே மீண்டும் நம்பிக்கையுடன் கடிதங்கள் எழுதுவோம்.