சிறப்புக் கட்டுரைகள்

தமிழ்த் தென்றல் திரு.வி.க. பிறந்தநாள் இன்று...

Published On 2023-08-26 10:21 IST   |   Update On 2023-08-26 10:21:00 IST
  • திரு.வி.க.வின் உரை மக்களை சிந்திக்கவும், சீறியெழவும் தூண்டின.
  • ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த நடுத்தரப் பள்ளியில் தமிழாசிரியராக சேர்ந்தார்.

இன்று (26-ந் தேதி) தமிழறிஞர் திரு.வி.க. பிறந்தநாள்.

தமிழ் உரைநடைக்குப் புதிய பொலிவும், வலிமையும் சேர்த்த திரு.வி.க. புதிய உரைநடையின் தந்தை எனவும் தமிழ்த்தென்றல் எனவும் போற்றப்படுகிறார்.

இவருடைய முன்னோர்கள் வாழ்ந்த ஊர் திருவாரூர். எனவே திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாணசுந்தரம் என்பதன் சுருக்கமே திரு.வி.க. வடமொழிசொற்களை கலவாமல், தூய தமிழில் எழுதவும், பேசவும் செய்தார். மேடைப் பேச்சை முதன்முதலில் இலக்கிய நடையில் பேசியவர் திரு.வி.க. அவருடைய வாக்கியங்கள் வினாக்களை எழுப்பி விடைதருபவனமாக அமைந்து இருக்கும். துப்பாக்கி, பீரங்கிவேண்டுமா? வேண்டாம்.. வேண்டாம்.

அடுக்குத்தொடர் அவர் வாக்கியத்தின் சிறப்பு. அவர்கள் வயிற்றில் வீரப்பிள்ளைகள் பிறந்தார்கள். இந்நாளிலோ வெட்கம்! வெட்கம்! உன்னத தமிழ்நாட்டைக் காண, எழுங்கள்! எழுங்கள்!"

தமிழர்களே உங்கள் பெருமை என்ன? உங்கள் ஆண்மை எங்கே? அன்பு எங்கே? வீரத்தாய்மார் எங்கே? உங்களுக்குள் எத்தனை பிரிவு? எத்தனைப் பிளவு?.

திரு.வி.க.வின் உரை மக்களை சிந்திக்கவும், சீறியெழவும் தூண்டின. இவரது தீவிரமான உணர்ச்சி கொந்தளிப்பு ஏற்படுத்தக்கூடிய மேடைப்பேச்சுக்கு இளைஞராக இருந்த அறிஞர் அண்ணா ரசிகராக இருந்தார். 'அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரை தீட்டியவர். எதிர்கால உலகத்துக்காக சிறந்த ஏடுகளைத் தயாரிப்பவர், நம் திரு.வி.க' என்று அறிஞர் அண்ணா மனம் திறந்து பாராட்டினார்.

இந்திய விடுதலைக்கு மட்டுமல்லாமல் தொழிலாளர் முன்னேற்றம், பெண்ணுரிமை, தமிழ் மொழிவளர்ச்சி, முதலிய துறையில் ஈடுபட்டு பெரும் தொண்டாற்றினார். திரு.வி.க. 1883-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி காஞ்சிபுரம் அருகில் உள்ள துள்ளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் விருத்தாச்சலம். தாயார் சின்னம்மாள். திரு.வி.க. பத்தாம் வகுப்பு வரைதான் படித்தார் என்றாலும் தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக யாழ்ப்பாணம் கதிர்வேற் பிள்ளை, மயிலை தணிகாசலம் முதலியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோரிடம் திருக்குறள், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவசித்தாந்தம் உபநிடதங்கள் ஆகியவற்றை கற்றுணர்ந்தார். நீதிபதி சதாசிவராவிடம் ஆங்கிலம் கற்றார். ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, கீட்ஸ் போன்றோரின் ஆங்கில நூல்களை படித்தார். ஸ்பென்சர் நிறுவனத்தில் இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை ராஜினாமா செய்தார்.

ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த நடுத்தரப் பள்ளியில் தமிழாசிரியராக சேர்ந்தார். அப்போது கமலாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பின் அந்த வேலையை விட்டுவிலகி தேசபக்தன் நாளிதழின் ஆசிரியரானார். தேசபக்தனில், எளிய இனிய தமிழில் திரு.வி.க. எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்று விளங்கின. கமலாம்பிகை அம்மாளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. திரு.வி.க.வின் மனைவி தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும்படி கணவரிடம் கேட்டுக்கொண்டார். அதைக்கேட்டு வியப்படைந்த திரு.வி.க. எல்லாப் பெண்களும் நகை, புடவை வாங்கதான் விரும்புவார்கள். உனக்கு நகை, புடவை மீது விருப்பம் இல்லையா? என கேட்க அவை என்னிடம் போதுமான அளவில் உள்ளன என கமலாம்பாள் பதில் கூறவும் மனைவியின் விருப்பத்திற்கேற்ப அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார்.

கமலாம்பாள் நன்றாக பாடுவார். அவரை திருவொற்றியூர் கடற்கரைக்கு அழைத்துச்சென்று அவரை பாடச்சொல்லி கேட்டு மகிழ்வார். உடல் நலக்குறைவால் கமலாம்பாள் திடீரென மரணம் அடைந்தார். இது திரு.வி.க.வை பேரிடியாகத் தாக்கியது. மனைவி உயிரோடு இருந்தபோது புகைப்படம் எடுக்கவில்லை. இறந்தபிறகு துயரத்துடன் அவரது உடலைப் படமெடுத்தார்.

அதன்பிறகு அவரது உறவினர்கள் மறுமணத்திற்கு வற்புறுத்திய போதும், அதனைத் தவிர்த்தார். நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் என்று கூறி மறுமணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து திரு.வி.க.விலகினார். பின்னர் நவசக்தி இதழைத் தொடங்கி அதன் ஆசிரியர் ஆனார். நவசக்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முரசாக ஒலித்தது. 20 ஆண்டுகள் தொடர்ந்து அந்த பத்திரிகையை நடத்தி தேச பக்தி கனலை மூட்டினார். திரு.வி.க.வின் அனல் பறக்கும் எழுத்துக்கள் நாடு முழுவதும் புகழ் பெற்றன. எழுத்துவேந்தர் கல்கியின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. தன்குருவான திரு.வி.க.வுக்கு நன்றி செலுத்தும் வகையில் கல்யாணசுந்தரம் என்ற பெயரில் உள்ள 'கல்' என்ற எழுத்துகளையும் தன்பெயரில் உள்ள முதல் எழுத்தான 'கி'யையும் இணைத்து 'கல்கி 'என்று மாற்றிக்கொண்டார்.

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது அவர் நடித்த ஒரு படத்தில் சிறுவனுக்கு அவர் அறிவுரை சொல்வது போல் ஒரு பாடல் வரும். 'நல்ல, நல்ல பிள்ளைகளை நம்பி! இந்த நாடே இருக்குது தம்பி! என்பது பல்லவி. சரணத்தில் ஒரு இடத்தில் கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்! மேடையில் முழங்கு திரு.வி.க.வைப் போல் என்றுவரும். திரு.வி.க. காங்கிரஸ்காரர். பாடல் வரியோ அவரை புகழ்கின்றது. இதில் இருந்து மாற்றாரையும் தன்வசம் ஈர்க்கும் பேச்சாற்றல் திரு.வி.க.வுக்கு உண்டு என்பதை அறியலாம்.

1919-ம் ஆண்டு காந்தியடிகளை முதன் முதலில் சந்தித்தார். காந்தியை காந்தியடிகள் என்று அழைத்தவரும் திரு.வி.க.வே.

அதன்பிறகு காந்தி தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது, மேடைப்பேச்சைமொழிப் பெயர்த்தார். அதன்பிறகு காந்தியடிகள், திரு.வி.க.வை சந்திக்கும் போதெல்லாம் மொழிப்பெயர்ப்பாளரே என்று அழைத்து வந்தார். 1918-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக தொழிற்சங்கம் தொடங்கினார். சென்னை தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டு அதன் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இதன் மூலம் தொழிலாளர்கள் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். போலீஸ் சங்கம், அச்சகர் தொழிலாளர் சங்கம், ரெயில்வே தொழிலாளர் சங்கம் தோன்ற காரணமானார், திரு.வி.க.

50-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி உள்ளார். பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இந்தியாவும், விடுதலையும், மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. திரு.வி.க. தன் வாழ்க்கை வரலாற்றை விளக்கி திரு.வி.க. வாழ்க்கை குறிப்பு என்ற நூலையும் எழுதி உள்ளார். திரு.வி. க.வுக்கு சர்க்கரை நோய் இருந்தது. அதனால் அவர் கண் பார்வை மங்கியது.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை முழுமூச்சாகக் கொண்ட திரு.வி.க. 1953-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி, தனது 71-வது வயதில் காலமானார்.

திரு.வி.கவின் தன்னலமற்ற தேசப்பணிகளைப் பாராட்டி மத்திய அரசு அவரது நினைவாகத் தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது.

Tags:    

Similar News