சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- ஆன்மிக வானில் பறக்கும் கிளிகள்..!

Published On 2022-07-14 14:15 IST   |   Update On 2022-07-14 14:15:00 IST
  • மதுரை மீனாட்சி கையிலும் அழகான ஒரு கிளி உண்டு. அது தமிழ்பேசும் அருணகிரிக் கிளி!
  • ஒவ்வொரு கிளி பறக்கும்போதும் `வேடன் வருவான், வலை விரிப்பான், ஆபத்து` எனச் சொல்லிக் கொடுத்தார் முனிவர்.

பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அழகிய பறவை கிளி. நாம் பேசியதைக்கேட்டு அப்படியே பேசும் திறன்பெற்ற பறவை அது.

மாமிசக் கடைக்காரன் வளர்க்கும் கிளி அவன் வீட்டுக்கு வருவோரைப் பார்த்து வெட்டு, கொல் என்று கூறி வரவேற்கும். முனிவர் வளர்க்கும் கிளியோ மந்திரங்கள் உச்சரித்து வந்தவர்களை வரவேற்கும்.

நாம் வளரும் இடத்தின் இயல்புகள்தான் நம் பண்புகளாய்ப் பரிணமிக்கும் என்பதைச் சொல்வதற்கான எடுத்துக்காட்டு இது.

பாலும் பழமும் மட்டும் சாப்பிட்டுத் தவ வாழ்க்கை வாழும் பறவை கிளி. நம் ஆன்மிக வானத்தில்தான் எத்தனை எத்தனை அழகழகான கிளிகள் பறக்கின்றன!

* `காமன் எல்லோருக்கும் காமன்` எனத் தமிழும் ஆங்கிலமும் கலந்த சிலேடை வாக்கியத்தைச் சொல்லி அன்பர்களைச் சிரிக்க வைப்பார் வாரியார் சுவாமிகள்.

காமனாகிய மன்மதன் கரும்பு வில்லை உடையவன் என்பதும் மலர்க் கணைகளைத் தொடுப்பவன் என்பதும் அறிந்த செய்திகள்தான். ஆனால் மன்மதனின் வாகனம் என்ன என்று பலர் அறியமாட்டார்கள்.

கிளியே காதல் கடவுளான மன்மதனின் வாகனம். மன்மதன் கிளி வாகனத்தில் ஏறிப் பறந்து வந்து கரும்பு வில்லை வளைத்து மலர்க் கணைகளால் தாக்கும்போது எந்த உயிரானாலும் காதல் வயப்படாமல் தப்ப இயலாது.

* சீதை வளர்த்த கிளியைப் பற்றி ஓர் அபூர்வ ராமாயணம் தகவல் தெரிவிக்கிறது.

சீதாதேவி மிதிலையில் இருந்து திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டாள். அப்போது அவள் பாசத்தோடு வளர்க்கும் ஒரு கிளிக்குஞ்சைக் கொண்டுவந்து சீதையிடம் கொடுத்தாள் அவள் தோழி நீலமாலை. சீதை அந்தக் கிளியோடு அயோத்திக்கு வந்து சேர்ந்தாள்.

ஒருநாள் கையில் கிளியுடன் நந்தவனம் வந்தாள். அங்கே அமர்ந்திருந்த ராமனிடம் தான் வளர்க்கும் கிளிக்கு ஒரு பெயர் வைக்குமாறு வேண்டினாள்.

கிளியை வாங்கி, அதன் முதுகைத் தடவிக் கொடுத்த ராமன், தான் உலகிலேயே அதிகம் நேசிக்கும் பெண்ணின் பெயரை அந்தக் கிளிக்கு வைக்கப் போவதாகத் தெரிவித்தான். தன் பெயரைத்தான் ராமன் வைக்கப் போகிறான் என்றெண்ணி சீதை நாணித் தலைகுனிந்தாள்.

ஆனால் ராமனோ கிளிக்குக் கைகேயி என்று பெயர் சூட்டினான் என்கிறது அந்த ராமாயணம். தன்னைக் காட்டுக்கு அனுப்பப் போகும் கைகேயியிடம் ராமன் எத்தனை அன்பு கொண்டிருந்தான் என்பதை இச்சம்பவம் தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்ல, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அல்லவா? கிளிக்கு சொந்த புத்தி கிடையாதே?

பின்னாளில் கைகேயியும் மந்தரை சொன்னதையெல்லாம் அப்படியே கேட்டுச் சொல்லப் போகிறாளே? அதை முன்கூட்டியே உணர்ந்துதான் ராமன் கிளிக்குக் கைகேயியின் பெயரை வைத்தானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

* வனவாசத்தின் தொடக்கத்தில் சுமந்திரன் தேரில் ராமனையும் லட்சுமணவனையும் சீதையையும் அயோத்தியில் இருந்து கங்கைக் கரையருகே கொண்டு விடுகிறான்.

அயோத்திக்குத் திரும்பிச் செல்லுமுன் அவர்களிடம் `அயோத்திக்குச் சென்று நான் சொல்ல ஏதேனும் செய்தி உண்டோ?' எனக் கண்ணீருடன் வினவுகிறான்.

அப்போது தன் துயரையெல்லாம் மறந்த சீதாப் பிராட்டி, தான் வளர்த்து வந்த கிளிகளையும் பிற பறவைகளையும் பத்திரமாய் வளர்த்துப் பாதுகாக்குமாறு தன் சேடிகளிடம் சொல்லும்படிச் சொல்கிறாள்.

அவள் பறவைகள் மேல் கொண்டிருந்த அன்பை எண்ணி சுமந்திரர், ராமன், லட்சுமணன் மூவரும் மனம் நெகிழ்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தை அடையாளச் செய்தியாகச் சொல்லுமாறு ராமன் அனுமனிடம் சொல்லி அனுப்ப, அனுமன் சுந்தரகாண்டத்தில் இச்செய்தியைச் சீதையிடம் சொல்வதாகக் கம்ப ராமாயணத்தில் வருகிறது.

எள்அரிய தேர்தரு சுமந்திரன் `இசைப்பாய்

வள்ளல்மொழி வாசகம்` எனத் துயர் மறந்தாள்

`கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள!` என்னும்

பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும்.

(கம்ப ராமாயணம்.)

திருப்பூர் கிருஷ்ணன்

 * ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் நாச்சியார் கையில் கிளியோடு காட்சி தருகிறார். அந்தக் கிளி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகச் செய்யப்பட்டு ஆண்டாளின் திருக்கரத்தில் சார்த்தப்படுகிறது.

கிளியின் பச்சை நிற உடல் பகுதியை வெற்றிலையால் செய்கிறார்கள். கால்கள் இரண்டும் மூங்கில் குச்சிகளால் செய்யப்படுகின்றன. அழகிய சிவப்பு நிற அலகுப் பகுதியை மாதுளை மொட்டுகளால் வடிவமைக்கிறார்கள்.

இவ்விதம் இயற்கைப் பொருட்களாலேயே ஒரு கிளி வடிவத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாளும் நான்கரை மணிநேரம் ஆவதாகச் சொல்லப்படுகிறது. கையில் கிளியைத் தாங்கியுள்ள புனிதமே வடிவான ஆண்டாளை பக்தியுடன் வழிபட்டுப் பரவசம் அடைகிறார்கள் அடியவர்கள்.

* மதுரை மீனாட்சி கையிலும் அழகான ஒரு கிளி உண்டு. அது தமிழ்பேசும் அருணகிரிக் கிளி!

பிரபுட தேவராயன் என்ற விஜயநகர மன்னன் திருவண்ணாமலைப் பகுதியை ஆண்டுவந்த காலம். சம்பந்தாண்டான் என்பவன் மன்னனின் நட்பைப் பெற்றிருந்தான். ஆனால் மன்னன் தன்னைவிட அருணகிரிநாதருக்கு அதிக மதிப்பளிப்பதை எண்ணிப் பொறாமை கொண்டான்.

வானுலகிலிருந்து கற்பக மலரைப் பறித்துவர அருணகிரியால் இயலும் என்றும் அவ்விதம் செய்யுமாறு அருணகிரியை வேண்டும்படியும் சம்பந்தாண்டான் மன்னனைத் தூண்டினான்.

மன்னன் வேண்டுகோளை ஏற்ற அருணகிரியார் இறந்த கிளியின் உடலில் தன் உயிரைப் புகுத்திக் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து தேவலோகம் சென்றார். அவர் மீண்டும் தன் உடலில் பிரவேசிக்காதவாறு சம்பந்தாண்டான் அந்த உடலை எரித்துவிட அருணகிரி திரும்பிய பின்னரும் கிளியாகவே இருக்க நேர்ந்தது.

அந்தக் கிளி கயிலாயத்திற்குப் பறந்துசெல்ல, முருகன் புகழ்பாடும் அருணகிரிக் கிளியைத் தன் கையில் தாங்கிக் கொண்டாள் அன்னை மீனாட்சி. எப்போதும் தன் மகன் முருகனின் புகழை அருணகிரிக் கிளி மூலம் கேட்டு அவள் மகிழ்கிறாள் என்கிறது அருணகிரி பற்றிய கதை.

* பறவைகளையும் மேகத்தையும் தூதாக அனுப்பும் மரபு பழைய இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது.

`அழகர் கிள்ளை விடு தூது` என்ற நூல் பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை எழுதியது.

திருமால் எழுந்தருளிய தலங்களில் ஒன்று திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் மலை. காதல் கொண்ட பெண்ணொருத்தி கிளியைத் தன் தலைவனான அழகர்மலைத் திருமாலிடம் தூதனுப்புவதான உத்தியில் அமைந்ததே இலக்கியச் சிறப்பும் பக்திச் சிறப்பும் மிகுந்த அழகர் கிள்ளை விடு தூது என்ற நூல். அந்த நூலில் கிளியை மையமாக வைத்துப் பல ஆன்மிகச் செய்திகள் பேசப்படுகின்றன.

* சுகா என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்குக் கிளி என்று பொருள். அதனால்தான் கிளிமுகம் கொண்ட மகரிஷி சுகப் பிரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் புதல்வர் இவர். பரீட்சித்து மகாராஜாவின் கடைசி ஏழு நாட்களில் அவருக்கு பாகவதத்தை எடுத்துரைத்தவர் இவர்தான்.

* கிளிகள் மரத்தில் அமர்ந்திருக்கும்போது வேடர்கள் அவற்றை வேட்டையாடுவது கடினம். கிளியுடலின் பச்சை நிறம் மரத்தின் இலைகளோடு கலந்திருக்கும். அலகின் சிவப்பு நிறமோ மரத்தின் பழங்களைப் போல் தோன்றும்.

எல்லாக் காகங்களும் கறுப்புத்தான். எல்லாக் கொக்குகளும் வெளுப்புத் தான். ஆனால் கிளிகள் அப்படியல்ல. கிளிகளில் பச்சைக் கிளிகள் மட்டுமல்ல, அழகிய பஞ்சவர்ணக் கிளிகளும் உண்டு.

* கையில் தர்மம் செய்வதற்கான சில தங்க நாணயங்களோடு கானகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார் ஒரு முனிவர். வேடன் விரித்த வலையொன்றில் ஏராளமான கிளிகள் தானியத்திற்கு ஆசைப்பட்டு வந்து சிக்கிக் கொண்டதையும் வேடன் அந்தக் கிளிகளைப் பிடிப்பதையும் பார்த்தார். கிளிகளின் மேல் அவருக்கு இரக்கம் பிறந்தது.

வேடனிடம் தன்வசமிருந்த தங்க நாணயங்களைக் கொடுத்து, வலையில் சிக்கிய கிளிகளை விடுதலை செய்ய வேண்டினார்.

மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்ட வேடன் கிளிகளை ஒவ்வொன்றாக விடுவித்து வானில் பறக்க விட்டான்.

ஒவ்வொரு கிளி பறக்கும்போதும் `வேடன் வருவான், வலை விரிப்பான், ஆபத்து` எனச் சொல்லிக் கொடுத்தார் முனிவர். கிளிகள் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்லியவாறே பறந்தன. பின்னர் முனிவர் கிளிகள் இனி வேடன் வலையில் சிக்காது என்ற எண்ணத்துடன் அவ்விடம் விட்டு அகன்றார். வேடன் வீடு திரும்பினான்.

முனிவர் கொடுத்த பொற்காசுகள் தீர்ந்ததும் அவன் மறுபடி கிளிகளை வேட்டையாட வந்து வலைவிரித்தான். ஆனால் மரத்திலிருந்த கிளிகள் `வேடன் வருவான், வலை விரிப்பான், ஆபத்து` எனக் கூட்டமாகக் குரல் கொடுக்கவே சலிப்போடு வலையை எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டான்.

இப்படிப் பலமுறை நடந்தது. ஒருமுறை `ஆனது ஆகட்டும், தன்னைப் பற்றி அறியாத வெளியூர்க் கிளிகளாவது வலையில் சிக்கட்டும்` என எண்ணி வலையை விரித்து இரையைத் தூவி மறைந்து நின்று காத்திருந்தான். அப்போதுதான் அந்தச் சம்பவம் மறுபடி நிகழ்ந்தது. அத்தனை கிளிகளும் `வேடன் வருவான், வலை விரிப்பான், ஆபத்து` என்று சொல்லியவாறே வலையில் மறுபடி விழுந்து சிக்கிக் கொண்டன.

வேடன் மகிழ்ந்தான். சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள். மற்றபடி சொன்ன சொற்களின் பொருளை அறியும் அறிவுத் திறன் அவற்றுக்கு இல்லை என்ற ரகசியத்தை அவன் உணர்ந்து கொண்டான்.

எப்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்த இந்தக் கதையைச் சொல்வதுண்டு. பொருளறியாமலும் மனம் ஒன்றாமலும் கிளிப்பிள்ளை போல் மந்திரங்களை ஜபிப்பதில் அதிகப் பலன் கிட்டாது. பொருளுணர்ந்து மனமொன்றி ஒவ்வொரு முறையும் மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும்போது பெரிய பலன் கிட்டும்.

ஆன்மிக வானில் பறக்கும் வண்ணக்கிளிகள் பல உயர்ந்த கருத்துகளை அறிவுறுத்தியவாறே தொடர்ந்து பறக்கின்றன. அவை நம் மனத்தை மகிழச் செய்வதோடு மேம்படுத்தவும் செய்கின்றன.

-:தொடர்புக்கு:-

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News