சிறப்புக் கட்டுரைகள்

வம்பு, தும்பு பண்ணாத ரம்பா

Published On 2023-05-15 15:21 IST   |   Update On 2023-05-15 15:21:00 IST
  • 1993-ம் ஆண்டு ஆ ஒக்கடு அடக்கு என்ற படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார்.
  • கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சி நடந்த போது குஷ்பு, ரம்பாவை நடுவர்களாக ஏற்பாடு செய்தோம்.

ரம்பா...

அழகிய லைலா...

இவள் மன்மத புயலா...

என்ற பாடலுக்கு போட்ட ஆட்டத்தை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவார்களா என்ன? ஆந்திராவில் இருந்து தமிழ் பட உலகுக்குள் நுழைந்த விஜயலட்சுமிதான் ரம்பா. அவர் முதன் முதலில் நடித்தது தெலுங்கு படம்.

1993-ம் ஆண்டு ஆ ஒக்கடு அடக்கு என்ற படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். அந்த படத்தில் ரம்பாவுக்கு மாஸ்டராக பணியாற்றினேன். அப்போது ரம்பா சின்ன பொண்ணு. அவரது அம்மா மற்றும் அண்ணனோடு படப்பிடிப்புக்கு வருவார். அவ்வளவாக யாரோடும் பேசிக் கொள்ளமாட்டார். வருவார். காட்சியை சொன்னால் அதற்கு ஏற்ப நடிப்பார் அவ்வளவுதான்.

காட்சி இல்லாத நேரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாலும் மற்றவர்களோடு சகஜமாக பேசக்கூட கூச்சப்படுவார். அப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்.

அதன் பிறகு தமிழில் உழவன், அதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா, மின்சார கண்ணா போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் அவருக்கு நான் நடன மாஸ்டராக பணியாற்றிய போது மாஸ்டர் ஜி என்று அவ்வப்போது அழைத்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார் அவ்வளவுதான்.

ஆனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த அளவுக்கு அமைதியாகவே இருக்க கூடியவர். எந்த வம்பு தும்பிலும் சிக்காதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்றே சென்று கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட ரம்பாவிடம் மிக நெருங்கிய நட்பு உருவாகும் காலமும் வந்தது. கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சி நடந்த போது குஷ்பு, ரம்பாவை நடுவர்களாக ஏற்பாடு செய்தோம். அந்த நிகழ்ச்சியில் நான், குஷ்பு, ரம்பா மூவரும் ஒன்றாக இருந்தோம். அதனால் எங்களுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் ஒருநாள் கிராமிய பாடல் சுற்று நடந்த போது பாவாடை, தாவணியில் அவர் அச்சு அசலாக தமிழ் பெண் போல் ஆடிய நடனம் எல்லோராலும் பாராட்டப்பெற்றது. ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. அந்த காஸ்டியூமில் அவர் நடித்ததை பார்த்து நானே சொன்னேன். "இந்த காஸ்டியூமில் உன்னை பார்த்து நிச்சயம் பலர் பெண் கேட்டு வருவார்கள்" என்று. ஏற்கனவே கல்யாண வயதில் இருந்த அவருக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. ஆனால் திருமணம் கைகூடாமல் தள்ளி போய் கொண்டே இருந்தது. நான் இவ்வாறு சொன்னதும், "மாஸ்டர்ஜி உங்கள் வாய் சொல்லாவது பலிக்கட்டும்" என்று அவரும் தமாஷாக சொன்னார்.

ஆனால் நான் சொன்னது போலவே நடந்தும் விட்டது. அதாவது மானாட மயிலாட நிகழ்ச்சி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று தந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கனடாவில் இருந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாபன் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்திருக்கிறார்கள். அப்போது பாவாடை, தாவணியில் ரம்பாவை பார்த்ததும் உனக்கு மனைவி அமைந்தால் இப்படி அமைய வேண்டும் என்று அவரது சகோதரிகள் சொல்லி இருந்தார்கள். அதை கேட்டதும் அவருக்கும் ஆசை.

இந்திரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். கனடாவில் மிகப்பெரிய தொழில் அதிபர். சென்னையிலும் அவருக்கு தொழில் நிறுவனங்கள் இருந்தது. ரம்பாவை தொலைக்காட்சியில் பார்த்தவர் கண்ணுக்குள் அந்த உருவத்தை நிறுத்தியபடி சென்னைக்கு வந்ததும் விசாரிக்க தொடங்கி இருக்கிறார்.

ரம்பாவின் சகோதரரிடம் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. அதன் பிறகு இரு வீட்டாரும் பேசி திருமணமும் உறுதி செய்யப்பட்டது. எதேச்சையாக நான் சொன்னது பலித்துவிட்டதால் ரம்பாவுக்கு என்னிடம் பிரியம் அதிகமானது.

மாஸ்டர் நீங்கள் சொன்னது போல் நடந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டார். திருமண நாள் வந்தது. திருப்பதியில் வைத்து திருமணம். நானும் சென்றிருந்தேன். அவரது கணவர் மிக நல்ல மனிதர். நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்திற்கு நேரடியாக வந்து நன்றி சொல்லிவிட்டு சென்றார்.

திருமணம் முடிந்த பிறகு ரம்பா கனடாவில் குடியேறினார். அவர் கனடா சென்ற பிறகும் என்னிடம் தொடர்பிலே இருந்து வந்தார். சென்னைக்கு எப்போது வந்தாலும் என்னை தொடர்பு கொண்டு பேசாமல் செல்லமாட்டார். ஆரம்ப காலத்தில் பேசவே தயங்கியவர். பின்னர் என்னோடு பேசாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்.

Tags:    

Similar News