புதுச்சேரி

நள்ளிரவு வரை நீடித்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்

Published On 2025-03-22 09:38 IST   |   Update On 2025-03-22 09:38:00 IST
  • மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
  • 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.

தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12-ந் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, சட்டசபையில் தினமும் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.

எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளித்தனர். பூஜ்ய நேரத்திலும் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் அனல் பறந்தது. நேற்று 9-ம் நாள் கூட்டம் காலை 9.30 மணி தொடங்கியபோது, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேச வேண்டும் என்பதால் மாலையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

இதன்படி நேற்று காலையில் தொடங்கிய கூட்டம் மதியம் 2.20 மணி வரை நடந்தது. தொடர்ந்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டம் நேற்று நள்ளிரவு 10.40 மணி வரை நீடித்தது. அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மானிய கோரிக்கையின் மீது பேசும் வகையில் சட்டசபை இரவு 10.40 மணி வரை நடத்தப்பட்டது.

முதலமைச்சர் ரங்கசாமி இரவு 9 மணிக்கு சட்டசபையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஒரே நாளில் மதிய உணவு இடைவேளை 2 மணி நேரம் தவிர்த்து 11 மணி நேரம் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்தது.

இன்று (சனிக்கிழமை) நாளை ஞாயிற்றுக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் இல்லை.

இதைத்தொடர்ந்து 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.

இதில் 27-ந் தேதியை தவிர்த்து மற்ற 3 நாட்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கின்றனர்.

Tags:    

Similar News