புதுச்சேரி
null

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை- சபாநாயகர்

Published On 2025-07-10 10:26 IST   |   Update On 2025-07-10 11:01:00 IST
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்.
  • தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

புதுச்சேரி:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்காக சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜவேலு, ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன், சந்திரபிரியங்கா ஆகியோர் சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.

இதன்பின் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் வேண்டும். இதற்காக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும். இதற்காக சிறப்பு சட்ட சபையை கூட்ட வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி சட்டசபையை கூட்ட முயற்சி எடுக்கப்படும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மாநில அந்தஸ்து வேண்டி வலுவான கருத்துக்களை முன்வைக்க சிறப்பு சட்ட சபையை கூட்ட கோரியுள்ளனர். 16-வது முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி எந்த பதிலும் வரவில்லை.

இதனால் சிறப்பு சட்டசபை கூட்ட கோரியுள்ளனர். நிர்வாகத்தில் சிறு,சிறு பிரச்சினைகள் வரும். கவர்னர், முதலமைச்சர் கலந்து பேசி சரி செய்வார்கள். சரியான பாதையில் அரசை கொண்டு செல்வார்கள். சிறப்பு சட்டசபையை கூட்ட கவர்னர் அனுமதி தேவையில்லை.

ஏற்கனவே தொடங்கிய கூட்டத்தொடர் முடிக்கப்படவில்லை. 6 மாதத்தில் எப்போது வேண்டுமானாலும், சபையை கூட்டலாம். கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் கருத்து மோதல் இருக்கத் தான் செய்யும். இது ஒன்றும் பிரச்சினை இல்லை. அரசு நிர்வாகம் முடங்கி விடவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. 5 ஆண்டுகளை கூட்டணி அரசு நிறைவு செய்யும். அடுத்த முறையும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். விரைவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர், டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News