செய்திகள்
வை-பை மூலம் ஐபோன்களை சார்ஜ் செய்யலாம்: காப்புரிமையில் தகவல்
ஆப்பிள் நிறுவனம் வை-பை ரவுட்டர் மூலம் ஐபோன்களை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்ற அமைப்புகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஐபோன்களை வை-பை ரவுட்டர் கொண்டு சார்ஜ் செய்யும் வசதிக்கான காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க்கில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி இரட்டை ஃபிரீக்வன்சி ஆன்டெனாக்களை கொண்டு வயர்லெஸ் முறையில் மின்சக்தியை மைக்ரோவேவ் ஃபிரீக்வன்சீக்களாக பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான டிரான்ஸ்ஃபர் சர்க்யூட்டரி, மற்றும் பாட்ச் ஆன்டெனா உள்ளிட்டவை ஐபோன்களிலேயே கட்டமைக்கப்படும்.
மொபைல் போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களில் வயர்லெஸ் சர்க்யூட்கள், தகவல் பரிமாற்றங்களை வயர்லெஸ் முறையில் இயக்க தேவையான ஒன்றாக இருக்கிறது. சில சாதனங்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை வழங்கவும் இவை அத்தியாவசிய தேவையாக இருக்கும் என ஆப்பிள் பதிவு செய்துள்ள காப்புரிமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களில் ஆப்பிள் தனது ஐபோன் 8 சாதனத்தில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் லக்ஸ்ஷேர் ஆப்பிள் நிறுவனத்திற்கான வயர்லெஸ் சார்ஜர்களை தயாரிக்கும் என்றும் ஐபோன்களுக்கான வயர்லெஸ் சார்ஜர்களை ஆப்பிள் நிறுவனம் தனியே விற்பனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் புதுவகை வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை வழங்கும் என தெரிவிக்கின்றன. தற்சமயம் வரை எழுத்துப்பூர்வமாக புதிய தொழில்நுட்பத்திற்கான விளக்கத்தை ஆப்பிள் வழங்கியுள்ள போதிலும், இது பயன்படுத்தக் கூடிய நிலையில் வெளியாக சில காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 8 செங்குத்தாக பொறுத்தப்பட்டுள்ள இரட்டை கேமரா அமைப்பு, எல்இடி பிளாஷ், டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் புதிய ஐபோனிலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்படும் என்றும் முழுமையான எட்ஜ்-டூடஎட்ஜ் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் ஹோம் பட்டன் நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.