தகுந்த நேரத்தில் என் மகன் அரசியலுக்கு வருவார்- ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவி ஷர்மிளா
- ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவியாக உள்ளார்.
- ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தை விமர்சிப்பதைவிட, தனது அண்ணனின் கட்சியை ஷர்மிளா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நகரி:
ஆந்திர மாநில அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும் இருந்தார். ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.
அதன் பின்னர் அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனது தந்தை பெயரில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியில் ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளாவும் இருந்து வந்தார். அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி, தெலுங்கானா மாநிலத்தில் தனி கட்சி ஒன்றை தொடங்கினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது ஷர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவியாக உள்ளார்.
ஷர்மிளா, ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தை விமர்சிப்பதைவிட, தனது அண்ணனின் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில் ஷர்மிளா தனது மகன் ராஜா ரெட்டியின் காதல் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துடன் கலந்து கொண்டார். இருப்பினும் அரசியலில் இருவரும் எதிரும் புதிருமாகவே இருக்கிறார்கள்.
சமீப காலமாக ஷர்மிளாவின் மகன் ராஜாவும் அரசியல் நிகழ்ச்சிகளின் தனது தாயுடன் அதிகம் தலைகாட்டுகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும், அது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.
கர்னூல் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஷர்மிளாவுடன் ராஜாவும் கலந்து கொண்டார். அப்போது அவரது அரசியல் வருகை குறித்து ஷர்மிளாவிடம் நிருபர்கள் கேட்டனர்.அதற்கு ஷர்மிளா, தகுந்த நேரத்தில் என் மகன் அரசியலுக்கு வருவார் என்று மட்டுமே பதிலாக கூறினார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ராஜாவை, அவருடைய பாட்டியான (ராஜசேகர ரெட்டியின் மனைவி) விஜயம்மா, உச்சி முகர்ந்து ஆசி கூறி வழியனுப்பிய வீடியோவும் வைரல் ஆனது.
இதன் மூலம் ஷர்மிளாவின் மகன் விரைவில் அரசியலில் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆந்திர அரசியலிலும் இதுவே பேசு பொருளாகவும் உள்ளது.