இந்தியா

கோப்பு படம்.

இளம்பெண்ணை கிரிக்கெட் மட்டையால் தாக்கி அடித்து, உதைத்த கும்பல்: 3 பெண்கள் உள்பட 13 பேருக்கு வலைவீச்சு

Published On 2023-11-02 03:43 GMT   |   Update On 2023-11-02 03:43 GMT
  • பொதுக்குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்திய பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்து, உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி உள்பட 13 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரா அருகே உள்ள நாராயண் ராவ் காலனியை சேர்ந்தவர் பானுப்பிரியா (30).

இவர் சம்பவத்தன்று அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி ஆகிய 3 பேர் தண்ணீரை வீணடிப்பதை பானுப்பிரியா பார்த்துள்ளார்.

இதையடுத்து குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனு உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு அறிவுரை கூற நீ யார்? என்று கூறி பானுப்பிரியாவை தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த 3 பெண்களும் மேலும் 10 ஆண்களுடன் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் பானுப்பிரியா வீட்டிற்கு சென்றனர். அங்கு பானுப்பிரியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இதையடுத்து அந்த கும்பல் பானுப்பிரியாவை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து சாலையில் தள்ளி கிரிக்கெட் மட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் பானுப்பிரியா பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி உள்பட 13 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொதுக்குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்திய பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்து, உதைத்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News