பயணிகள் ரெயிலில் நடனம் ஆடிய இளம்பெண்
- கருப்பு நிற கிராப்டாப் மற்றும் பாவாடை அணிந்திருந்த பெண் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
- சில பயணிகள் அதனை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட அது வைரலானது.
சமூக வலைதளங்களில் வைரலாவதற்காகவே இளைஞர்கள், இளம்பெண்கள் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் சமீப காலமாக ஓடும் ரெயில்களில் நடனம் ஆடுவது, ரெயில்வே நடைமேடைகளில் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து பதிவிடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பொது இடங்களில் அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தாலும் சில பயணிகள் அந்த எச்சரிக்கையை கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், மும்பையில் பயணிகள் ரெயிலில் இளம்பெண் ஒருவர் போஜ்பூரி பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கருப்பு நிற கிராப்டாப் மற்றும் பாவாடை அணிந்திருந்த அந்த பெண் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அவரது நடனத்தை பார்த்தனர். சில பயணிகள் அதனை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட அது வைரலானது.
இதைத்தொடர்ந்து மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே பெண்ணின் நடன வீடியோ வைரலாகி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது. அதைப்பார்த்த பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.