இந்தியா

போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் தலைநகர் டெல்லி.. தீவிர கண்காணிப்பு

Published On 2025-05-09 12:52 IST   |   Update On 2025-05-09 12:52:00 IST
  • அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • பதட்டமான பகுதிகளில் கூடுதல் படைகளை நிறுத்தப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நேற்று இரவு முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் சூழலில் வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசரநிலையைச் சமாளிக்க மருத்துவ மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். செங்கோட்டை மற்றும் குதுப் மினார் போன்ற அடையாளச் சின்னங்களுக்கு அருகில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

"காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். பதட்டமான பகுதிகளில் கூடுதல் படைகளை நிறுத்துகிறோம். இரவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பதட்டங்களைத் தொடர்ந்து, நாட்டில் 24 விமான நிலையங்கள் ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், டெல்லிக்கு செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா கேட்டில் பகுதியில் மக்கள் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News