பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் மீது கிராம மக்கள் கல்வீசி தாக்குதல்
- இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது.
- எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
திக்ரி சட்டசபை தொகுதியில் இந்துஸ்தானி அவாம் கட்சி போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அனில்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்துஸ்தான் அவாம் கட்சி வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அவர் வாக்கு சேகரிப்பதற்காக கயா மாவட்டத்துக்கு சென்றார். திதோரா கிராமத்தில் பிரசாரம் செய்ய சென்ற போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. அதைத் தொடர்ந்து கிராம மக்களும் தாக்கினார்கள்.
உள்ளூரில் சாலை அமைத்து தருமாறு அந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தராததால் ஆத்திரமடைந்து கற்கள் மற்றும் செங்கற்களால் கடுமையாக தாக்கினார்கள்.
இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது. கை மற்றும் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது. கிராம மக்களின் தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் கார் சேதமானது.
இந்த தாக்குதல் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கற்களை வீசிய சிலரை போலீசார் கைது செய்தனர்.