திருப்பதி கோவிலில் பக்தர்களை ஆபாசமாக திட்டிய தேவஸ்தான ஊழியர் சஸ்பெண்டு
- பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 51,818 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பக்தர் ஒருவர் பரிந்துரை கடிதத்துடன் தேவஸ்தான அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த தபேதார் மற்றும் 2 ஊழியர்கள் பரிந்துரை கடிதம் கொண்டு வந்த பக்தர் குடும்பத்தினரை ஆபாசமாக திட்டினர்.
இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். புகாரின் மீது விசாரணை நடத்த அதிகாரிகள் 3 ஊழியர்களையும் ஆஜராக வேண்டுமென தெரிவித்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனால் 2 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தும் ஒரு ஊழியரை சஸ்பெண்டு செய்ததும் தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 51,818 பேர் தரிசனம் செய்தனர். 19,023 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.2.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.