இந்தியா

ஆசிரியர் பணி நியமன முறைகேடு- திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

Published On 2022-10-11 05:30 GMT   |   Update On 2022-10-11 05:30 GMT
  • ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிக்கி உள்ளார்.
  • ஆசிரியர் முறைகேடு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு பூதாகரமாக வெடித்து உள்ளது. கடந்த 20 14-ம் ஆண்டு அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடந்தது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கபிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து முறைகேடு நடந்த காலகட்டத்தில் கல்வி மந்திரியாக இருந்தவரும் தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக பதவி வகித்தவருமான பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது உதவியாளரும், நடிகையுமான அப்ரிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரூ 50 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அப்ரிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிக்கி உள்ளார். அவரது பெயர் மாணிக் பட்டாசார்யா. இவர் தொடக்க கல்வி வாரிய முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்க துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று அமலாக்க பிரிவு அலுவலகத்தில் மாணிக் பட்டாச்சாரியா ஆஜரானார். அவரிடம் விடிய விடிய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டனர். விசாரணை முடிவில் மாணிக் பட்டா சார்யா கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஆசிரியர் முறைகேடு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இது அம்மாநில முதல்-மந்திரியும் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News