இந்தியா

கிரண் ரிஜிஜூ

பிரதமரை தரக்குறைவாக பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி கதறுகிறார்கள்: முன்னாள் நீதிபதிக்கு மத்திய மந்திரி பதிலடி

Published On 2022-09-04 13:18 GMT   |   Update On 2022-09-04 13:18 GMT
  • பிரதமருக்கு எதிராக பேசினால் கைது செய்து சிறையில் தள்ளுவார்கள் என முன்னாள் நீதிபதி பேச்சு
  • காங்கிரசால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேசமாட்டார்கள் என மத்திய மந்திரி காட்டம்

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா (ஓய்வு) தேசிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, கருத்து சுதந்திரம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

'இன்று நிலைமை மோசமடைந்து காணப்படுகிறது. ஒரு பொது இடத்தில் நின்றுகொண்டு, எனக்கு பிரதமரின் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என கூறினால், சிலர் எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்து, என்னை கைது செய்து, சிறையில் தள்ளலாம். இதனையே குடிமக்களாக நாம் அனைவரும் எதிர்க்கிறோம்' என்று முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறினார்.

இதற்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

உண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி இதனை கூறினாரா? என எனக்கு தெரியாது. அவர் கூறியது உண்மையாக இருந்தால் அவரது பேச்சே அவர் பணியாற்றிய நிறுவனத்தை இழிவுபடுத்துவதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த நேரமும் தடைகள் எதுவுமின்றி தரக்குறைவாக பேசுபவர்கள், கருத்து சுதந்திரம் இல்லை என்று கதறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேசமாட்டார்கள். சில மாநில கட்சி முதல்-மந்திரிகளை பற்றி விமர்சிக்க கூட ஒருபோதும் அவர்களுக்கு தைரியம் இல்லை.

இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News