இந்தியா

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார், மீட்பு குழுவினர்.

டெல்லியை போல ராஜஸ்தானிலும் பயங்கரம்: கள்ளக்காதலியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய வாலிபர்

Published On 2023-02-20 18:56 IST   |   Update On 2023-02-20 18:56:00 IST
  • கேந்திரிய வித்யாலயாவின் பின்புறம் உள்ள புதர்களில் ரத்தக்கறை படிந்த பெண்ணின் ஆடைகள், தலைமுடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
  • குட்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அனோ பரம் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது.

ஜெய்ப்பூர்:

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் கொலை செய்து உடல்களை துண்டு, துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே பாணியில் மும்பை உள்ளிட்ட சில இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகளிலும் உடல்களை துண்டு, துண்டாக வெட்டி சாலை ஓரத்திலும், முட்புதரிலும் வீசிய கொடூரங்கள் மேலும் அதிர்ச்சி அளித்தன.

இந்நிலையில் ராஜஸ்தானிலும் இது போன்ற ஒரு பயங்கர கொலை நடந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்ட பாலசார் கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் குட்டி. இவருக்கும் முண்ட சார் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் குட்டி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் 20-ந் தேதி தனது கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு குட்டி சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை என்பது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குட்டியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது 'சுவிட்ச் ஆப்' ஆன நிலையில் இருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் குட்டியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது பெற்றோர் 22-ந் தேதி ஸ்ரீ பாலாஜி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 28-ந் தேதி நாகூர் நகரில் மால்வா சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் பின்புறம் உள்ள புதர்களில் ரத்தக்கறை படிந்த பெண்ணின் ஆடைகள், தலைமுடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

போலீசார் ஆடையை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, அது குட்டியின் உடை என்பது தெரியவந்தது. இதனால் குட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக குட்டியின் தோழிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் குட்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த அனோ பரம் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் குட்டியின் கள்ளக்காதலனான அனோபரத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

திருமணம் ஆன குட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததால் அவரை கொலை செய்ததாகவும், பின்னர் உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி தெர்வா கிராமத்தில் உள்ள கிணறுகள் உள்பட சில இடங்களில் வீசியதாகவும் கூறினார்.

அதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் அனோபரத்தை கைது செய்தனர். பின்னர் குட்டியின் உடல் பாகங்கள் வீசப்பட்ட கிணற்றில் இருந்து உடல் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.

ஆனால் கிணற்றில் இருந்து உடல் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. டிரோன் கேமிராக்கள் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் முட்புதர்களில் உடல் பாகங்கள் ஏதேனும் கிடக்கிறதா என தேடும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் போலீசாருடன், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஜோஷி கூறுகையில், குட்டியை கொலை செய்ததை அனோபரம் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் சில விஷயங்களை கூறி அவர் விசாரணையை திசை திருப்புகிறார்.

குட்டியின் உடல் பாகங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படும் என்றார். 

Tags:    

Similar News