இந்தியா

தெலுங்கானாவில் பாறை இடுக்கில் 2 நாட்களாக சிக்கித் தவித்த நபர்.. போராடி மீட்ட அதிகாரிகள்

Published On 2022-12-15 15:35 GMT   |   Update On 2022-12-15 15:35 GMT
  • இரண்டு பாறைகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிக்குள் செல்போன் விழுந்துவிட்டது.
  • செல்போனை எடுக்க முயற்சித்தபோது பாறை இடுக்கில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார்.

நிஜாமாபாத்:

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் ரெட்டிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவர் நேற்று முன்தினம் மாலை, முயல்களை பிடிப்பதற்காக மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். பாறைகளுக்கு நடுவே தூங்கும் முயல்களைப் பிடிப்பதற்காக ஒரு இடத்தை எட்டி பார்க்கையில், அவரது செல்போன் தவறி இரண்டு பாறைகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிக்குள் விழுந்துவிட்டது.

சுமார் 15 அடி ஆழத்தில் விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த ராஜூ, பாறை இடுக்கில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாறை இடுக்கில் சிக்கியிருந்த போது ராஜுவுக்கு அவரது உறவினரான அசோக் அவருக்கு உணவு அளித்து தைரியம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மீட்பு பணியின்போது அதிகாரிகள் ராஜுவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பழச்சாறு போன்ற திரவ உணவுகளை வழங்கினர்.

சுமார் 48 மணி நேர தீவிர முயற்சிக்கு பிறகு இன்று பிற்பகல் ராஜூவை உயிருடன் மீட்டனர். உடனடியாக அவர் காமாரெட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News