பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றியா?: நோ சான்ஸ் என்கிறார் தேஜஸ்வி யாதவ்
- பீகாரில் வரலாறு காணாத அளவுக்கு வாக்கு பதிவாகி உள்ளது.
- அங்கு நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பிற்பகலில் புதிய ஆட்சி அமைப்பது யார் என தெரியும்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், நேற்று முன்தினம் 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த கணிப்புகள் எல்லாம் பா.ஜவின் உயர்மட்டத் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா கூட்டணி அமோக பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கப் போகிறது.
பீகார் தேர்தலில் வாக்காளர்களின் அதிக வாக்குப்பதிவு, மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. நவம்பர் 18 அன்று நாங்கள் பதவி ஏற்போம்.
பீகாரில் ஆளும் அரசாங்கத்தை மாற்ற சுமார் 76 லட்சம் கூடுதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்த கூடுதல் வாக்குகள் மாற்றத்திற்கானவை. மெதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற அச்சம் எனக்கு உள்ளது. இருப்பினும் நாங்கள் 160க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறப் போகிறோம்.
2024 மக்களவைத் தேர்தலில் இந்த கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என கூறின. தேர்தல் முடிவுகள் வந்த பின் பா.ஜக. எங்கு சென்றது என்பதை அனைவரும் பார்த்தனர் என தெரிவித்தார்.