மத்திய அரசுகள் எடுத்த பல முடிவுகளில் தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகித்துள்ளது: சந்திரபாபு நாயுடு
- இன்று ஆந்திர பிரதேசம் என்ன நினைக்கிறதோ?, அதை இந்தியா நாளை நினைக்கும்.
- இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பு போட்டியிட்டது. மத்தியில் சந்திரபாபு நாயுடு கட்சி ஆதரவு கொடுத்துள்ளதால் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு பல்வேறு காலக்கட்டத்தில் மத்திய அரசுகள் எடுத்த பல முடிவுகளில் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகித்தது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
மத்திய அரசுகள் பல்வேறு காலக்கட்டங்களில் எடுத்துள்ள பல்வேறு முடிவுகளில் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகித்துள்ளது. இன்று ஆந்திர பிரதேசம் என்ன நினைக்கிறதோ?, அதை இந்தியா நாளை நினைக்கும். இது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம் கட்சி மட்டுமே. அமைப்பு (organisational) வலிமையைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசம் நாட்டின் வலிமையான கட்சிகளில் ஒன்றாகும்.
கடந்த 43 வருடங்களாக தெலுங்குதேசம் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த கட்சி அவ்வளவுதான் (அழிந்து விட்டது) என ஏராளமானோர் கூறினர். ஆனால், தெலுங்குதேசம் கட்சியின் கொடி எப்போதும் உயரே பறந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.