இந்தியா

வெப் சீரியல் படப்பிடிப்பு என்ற பெயரில் மறைமுகமாக நடக்கும் பாலியல் தொழில்: கேரள ஐகோர்ட்டில் வாலிபர் புகார்

Published On 2022-10-29 04:54 GMT   |   Update On 2022-10-29 04:54 GMT
  • கேரளாவில் தற்போது வெப் சீரியல் எடுப்பதாக கூறி பாலியல் தொழில் நடக்கிறது.
  • பல ரிசார்ட்டுகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருக்கிறது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் வெப் சீரியலில் கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறி வாலிபர் ஒருவரை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக திருவனந்தபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த வாலிபர் கேரள ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சில டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தேன். பெண் இயக்குனர் ஒருவர் வெப் சீரியலில் எனக்கு கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறினார். அதனை நம்பி நானும் நடிக்க வந்தேன்.

கேரளாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின்பு என்னிடம் படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினர்.

ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிய பின்னர் என்னை ஆபாச காட்சிகளில் நடிக்க வைத்தனர். தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூறியதால் நான் மறுத்தேன்.

உடனே படக்குழுவினர் நான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை காட்டி மிரட்டினர். மேலும் படத்தில் தொடர்ந்து நடிக்காவிட்டால் ரூ.5 லட்சம் நஷ்டஈடாக தரவேண்டும் எனக்கூறினர். இதனால் வேறுவழியின்றி அந்த படத்தில் நடித்தேன்.

இப்போது அந்த படம் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. இதனை பார்த்த என் குடும்பத்தினர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

கேரளாவில் தற்போது வெப் சீரியல் எடுப்பதாக கூறி பாலியல் தொழில் நடக்கிறது. பல ரிசார்ட்டுகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருக்கிறது.

இதனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. நான் அளித்த புகார் தொடர்பாகவும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு இதில் தலையிட்டு வெப் தளத்தில் வெளியான படத்தை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

வெப் தொடர் தொடர்பாக வாலிபர் கோர்ட்டில் புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News