இந்தியா

திருப்பதியில் பக்தர் ஒருவருக்கு மாதத்தில் ஒரு முறை மட்டுமே தங்கும் அறை ஒதுக்கப்படும்

Published On 2023-03-15 05:20 GMT   |   Update On 2023-03-15 06:13 GMT
  • கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
  • வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமலையில் கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும் அறைகள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பக்தர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.

இந்த முறையால் தங்கும் அறைகள் பெறுவதிலும் அறையை காலி செய்யும்போது அதற்கான டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதிலும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனிவரும் நாட்களில் முகத்தை ஸ்கேன் செய்யும் திட்டமே அமல்படுத்தப்படும். இதனால் இடைத்தரர்கள் பிரச்சினை இருக்காது.

கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதே முறைதான் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவிலும் கடைப்பிடிக்கப்படும்.

இனி ஒரு பக்தருக்கு மாதத்தில் ஒருமுறை மட்டுமே திருமலையில் அறை ஒதுக்கப்படும்.

வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச லட்டு விநியோகம் செய்யும் முறையும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் பக்தர்கள் கூடுதலாக இலவச லட்டு வாங்குவது தவிர்க்கப்படும்.

எனவே இந்த திட்டமும் இனி தொடர்ந்து செயல்படுத்தபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரமும், தரிசன நேர ஒதுக்கீடு முறையில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 63,285 பேர் தரிசனம் செய்தனர். 22,487 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News