இந்தியா

வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி உயர்கிறது- ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

Published On 2023-02-08 06:35 GMT   |   Update On 2023-02-08 06:56 GMT
  • கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருக்கிறது.
  • ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மேலும் உயர்கிறது.

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை அறிவித்தார். இதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 2.25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருக்கிறது.

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மேலும் உயர்கிறது. இந்த வட்டி உயர்வு, கடன் வாங்கியவர்களுக்கு சாதகமில்லை. அதே வேளையில் வட்டி விகித உயர்வால் வங்களில் டெபாசிட் செய்தவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும். பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்கும் நிலையில் ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டியில் சக்தி காந்த தாஸ் மேலும் கூறியதாவது:-

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால் இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

நிலையற்ற உலகளாவிய வளர்ச்சிகளுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் மீள் தன்மையுடன் உள்ளது. சில்லரை பணவீக்கம் 4-ம் காலாண்டில் சராசரியாக 5.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022-23-ம் ஆண்டில் சில்லரை பணவீக்கம் 6.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் 5.3 சதவீதமாக இருக்கும்.

2023-24-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்த தருணத்தில் 0.25 சதவீத வட்டி விகித உயர்வு பொருத்தமானதாக கருதப்படுகிறது. பணவியல் கொள்கை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். பணவீக்கத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News