பெங்களூருவில் 14-வது சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்: விமானப்படை வீரர்களின் சாகசத்தை பிரதமர் ரசித்து பார்த்தார்
- பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில் விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான விமானங்கள் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின.
விமானப்படை வீரர்களும் பல்வேறு சாகசங்களையும் செய்து காட்டினார்கள். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த சாகச நிகழ்ச்சி மெய்சிலிக்கும் வகையில் அமைந்தது.
இந்த சாகசத்தை பிரதமர் நரேந்திரமோடி வெகுவாக ரசித்து பார்த்தார். காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணிவரை விமானங்களில் சாகசங்கள் நடைபெறுகிறது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
அதன் பிறகு இன்று விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நிறைவடைந்ததும் எலங்காவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கண்காட்சிக்கு வந்தவர்களை பலத்த சோதனைக்கு பிறகே பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.