திருப்பதியில் ஒத்திகையின் போது குண்டு வெடித்து ஆக்டோபஸ் படை வீரர் படுகாயம்
- ஆக்டோபஸ் படையில் உள்ள ஜெகதீஷ் என்பவர் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வதுகுறித்து ஒத்திகை செய்து கொண்டு இருந்தார்.
- ஒத்திகையின் போது வெடிகுண்டு வெடித்து ஆக்டோபஸ் படை வீரர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் தடுப்பதற்காகவும் ஆக்டோபஸ் அதிரடி படை எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருமலையில் ஆக்டோபஸ் படையினருக்கு வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வது, வெடி விபத்தில் சிக்குபவர்களை மீட்பது, கலவரத்தின் போது கண்ணீர் புகை குண்டு வீசுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ஆக்டோபஸ் படையில் உள்ள ஜெகதீஷ் என்பவர் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்வதுகுறித்து ஒத்திகை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.
இதில் ஜெகதீஷின் கைகள், கால்கள் பலத்த சேதம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெகதீஷ் கடந்த 12 ஆண்டுகளாக பாதுகாப்பு படையில் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியதாகவும் அவருடன் பணியாற்றும் சக வீரர்கள் தெரிவித்தனர்.
ஒத்திகையின் போது வெடிகுண்டு வெடித்து ஆக்டோபஸ் படை வீரர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.