இந்தியா

2024-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களம் இறங்க வாய்ப்பு

Published On 2022-08-10 06:01 GMT   |   Update On 2022-08-10 06:01 GMT
  • பாரதிய ஜனதா தங்கள் கட்சியை அவமதித்து விட்டது.
  • பிரதமர் பதவிக்கும் அவர்கள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பகையை மறந்து எதிர்கட்சிகளுடன் தற்போது கைகோர்த்து உள்ளார். இன்று அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறும் போது, பாரதியஜனதா தங்கள் கட்சியை அவமதித்து விட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க அக்கட்சி முயற்சி செய்தது. எனவே கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று தெரிவித்தார்.

நிதிஷ்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பாரதிய ஜனதாவை துணிந்து எதிர்த்துள்ளதால் நிதிஷ்குமாரின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். பல்வேறு தலைவர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார் களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு அடி படத் தொடங்கி உள்ளது.

ஏற்கனவே பாரதிய ஜனதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவிக்கும் அவர்கள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

இப்போது நிதிஷ்குமாரும் மோடிக்கு எதிராக திரும்பி உள்ளதால் அவரையும் பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. பீகாரில் நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து உள்ளது. மந்திரி சபையில் இடம் பெறவும் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் தாரிக்அன்வர் கூறும் போது, நாங்கள் பதவிக்காக ஆசை பட வில்லை. பாரதிய ஜனதா அல்லாத அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News