இந்தியா

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, துணைக்குழுக்களின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை

Published On 2022-12-29 04:21 GMT   |   Update On 2022-12-29 08:23 GMT
  • முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
  • திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் சோதனை நடைபெற்றது.

திருவனந்தபுரம்:

பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மேலும் பல துணை குழுக்கள் இருப்பது தெரியவந்தது.

இத்துணைக்குழுக்கள் மூலம் இந்த அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். எனவே கைதானவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் பல முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு மற்றும் இந்த அமைப்புக்கு தொடர்புடைய துணை குழுக்களின் அலுவலகங்களில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. முடிவு செய்தது.

அதன்படி முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. இதுபோல பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் இச்சோதனை நடைபெற்றது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News