இந்தியா

காயமடைந்த சுதீர்கான்,  தற்கொலை செய்த சஜிகுமார்



திருவனந்தபுரம் அருகே கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் தேடப்பட்டவர் தற்கொலை

Published On 2023-07-26 05:21 GMT   |   Update On 2023-07-26 09:09 GMT
  • சுதீர்கான் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாறநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை சுதீர்கான் தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஜிகுமார் வீட்டுக்குள் புகுந்து, சுதீர்கானின் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றார். இதில் அவருக்கு முகம், கண்கள், மார்பு, வயிறு மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.

அவரை அவருடைய மனைவி ஹிருனிசா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கட்டக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுதீர்கான் சேர்க்கப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிலையில் சுதீர்கான் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுதீர்கான் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல தகவல்கள் கிடைத்தன. வெள்ளூர்கோணம் பால் கூட்டுறவு சங்க தலைவராக சுதீர்கான் இருந்து வரும் நிலையில், அங்கு சஜிகுமார் செயலாளராக இருந்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சஜிகுமார், சில பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறார். அப்போது சங்கத்தின் சில பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சுதீர்கான் மற்றும் சஜிகுமார் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அவர் ஆசிட் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. இருந்தபோதிலும் சஜிகுமார் பிடிபட்டால் தான் சரியான காரணம் தெரியவரும் என்பதால் தலைமறைவாகிய அவரை போலீசார் தீவிரமாக தேடினர்.

அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல இடங்களுக்கு சென்று அவரை தேடிவந்தனர். மேலும் அவரது செல்போனை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது அவரது செல்போன் சிக்னல் தமிழக பகுதியில் இருப்பது போன்று காண்பித்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தமிழகம் விரைந்தனர். மேலும் சஜிகுமார் குறித்து தமிழக காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது

இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் சஜிகுமார் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கேரள போலீசார், மதுரைக்கு விரைந்தனர். போலீசாருக்கு வந்த முதற்கட்ட தகவலில், சஜிகுமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆசிட் வீசிய சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்று கருதி, பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கேரளா போலீசார் மதுரை விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News