உலகம்

மலேசியாவின் 10-வது பிரதமராக பதவியேற்றார் அன்வார் இப்ராகிம்

Published On 2022-11-24 07:16 GMT   |   Update On 2022-11-24 16:57 GMT
  • அன்வார் இப்ராகிம் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.
  • முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது.

மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.

ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மொகிதீன் யாசினி பிரதமராக பதவி ஏற்றார்.

அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார். இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில்,  அன்வர் இப்ராஹீம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.

முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆனால், மற்ற சிறிய கட்சிகள் ஐக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது. மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்படுகிறார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்றுமாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.

Tags:    

Similar News